புதுடில்லி, ஜூலை 24– 2024-2025 ஆண்டுக்கான ஒன்றிய பிஜேபி அரசு அளித்துள்ள பட்ஜெட் மீது நாடும் முழுவதும் கண்டனக் குரல்கள் வெடித்துள்ளன.
காங்கிரஸ் கட்சித் தலைவர்
மல்லிகார்ஜூன கார்கே கருத்து!
தனது அரசை காப்பாற்ற வேண்டும் என்று ஒன்றிய பட்ஜெட்டை தயாரித்துள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது எனவும் பட்டியலின, பழங்குடியின, தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “மோடி அரசின் “காப்பிகேட் பட்ஜெட்” காங்கிரசின் நீதி அஜெண் டாவைக்கூட சரியாக காப்பி செய்ய முடியவில்லை!
மோடி அரசாங்கத்தின் பட்ஜெட், அதன் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்ற அரைவேக்காடு “மந்தைகள்” விநியோகம் செய்கிறது, இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி பிழைத்து வருகிறது.
இது “நாட்டின்முன்னேற்றத்திற்கான” பட்ஜெட் அல்ல, “மோடி அரசைக் காப்பாற்ற” பட்ஜெட்! 10 ஆண்டுகளுக்குப் பிறகு,ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பிரச்சினையை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு வரையறுக்கப்பட்ட அறிவிப்புகள் வந்துள்ளன. விவசாயிகளைப் பற்றி மேலோட்டமான பேச்சுக்கள் மட்டுமே உள்ளன, ஒன்றரை மடங்கு எம்.எஸ்.பி. மற்றும் இரட்டிப்பு வருமானம் – அனைத்தும் தேர்தல் மோசடியாக மாறியது! கிராமப்புற ஊதியத்தை உயர்த்தும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.
தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர், நடுத்தர வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழை மக்களுக்கு காங்கிரஸ்-அய்க்கிய முற்போக்குக் கூட்டணியால் செயல்படுத்தப்பட்ட புரட்சிகரமான திட்டம் எதுவும் இல்லை. “ஏழை” என்ற வார்த்தை தன்னை முத்திரை குத்து வதற்கான ஒரு வழிமுறையாக மாறிவிட்டது, உறுதியான ஒன்றுமில்லை!
இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான எதுவும் இல்லை, இது அவர்களின் பொருளாதார திறனை அதிகரிக்கும் மற்றும் அவர்கள் மேலும் மேலும் தொழிலாளர் தொகுப்பில் பங்கேற்க உதவும்.
மாறாக, பணவீக்கத்தால் அரசு தன்னைத்தானே அடித்துக் கொண்டு,மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்து, முதலாளித்துவ நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கிறது! விவசாயம், சுகாதாரம், கல்வி,பொதுநலம் மற்றும் பழங்குடியினர் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட குறைவாகவே
செலவிடப்பட்டுள்ளது,ஏனெனில் இவை பாஜகவின் முன்னுரிமைகள் அல்ல. அதேபோல, மூலதனச் செலவில் ரூ.1 லட்சம் கோடி குறைவாகச் செலவிடப்பட்டிருந்தால், வேலைவாய்ப்புகள் எங்கிருந்துபெருகும்? நகர்ப்புற மேம்பாடு, ஊரக வளர்ச்சி, உள்கட்டமைப்பு, உற்பத்தி, MSME, முதலீடு, EV திட்டம் – ஆவணம், கொள்கை, தொலைநோக்கு, மறுஆய்வு போன்றவை மட்டுமே பேசப் பட்டன, ஆனால் பெரிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நாள்தோறும் ரயில் விபத்துகள் நடக்கின்றன, ரயில்கள் நிறுத்தப்படுகின்றன, பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, சாதாரண பயணிகள் சிரமப்படுகின்ற னர், ஆனால் ரயில்வே பற்றி பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை, பொறுப்புக்கூறல் இல்லை.
சென்சஸ் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி எதுவும் கூறப்படவில்லை, அதேசமயம் இது மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல் தாக்கல் செய்யப்படும் அய்ந்தாவது பட்ஜெட்! இது அதிர்ச்சியூட்டும் மற்றும் எதிர்பாராத தோல்வி – இது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் எதிரானது!
2024 மே 20 அன்று, அதாவது தேர்தலின் போது, மோடி ஜி ஒரு பேட்டியில் “எங்களிடம் ஏற்கனவே 100 நாட்கள் செயல் திட்டம் உள்ளது” என்றுகூறி யிருந்தார்…
இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஆக்ஷன் ப்ளான் பண்ணும்போது, குறைந்தபட்சம் பட்ஜெட்டிலேயே சொல்லியிருக்காங்க!
பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை, பொதுமக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் மட்டுமே பாஜக மும்முரமாக உள்ளது”.
– இவ்வாறு மல்லிகார்ஜூனகார்கே தெரிவித்துள்ளார்.
வைகோ கண்டனம்
மதிமுக பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
பத்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள், நிதி ஆயோக் மூலம் பெற்ற ஆலோசனைகள் எவையும் நாட்டின் சாதாரண எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பயனளிக்கவில்லை.
தற்போது ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2024-2025 வரவு-செலவு அறிக்கையில் உற்பத்தி, வேலை வாய்ப்புகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்த்திருத்தங்கள் உள்ளிட்ட 9 கூறுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் இளைஞர்கள்,பெண்கள், விவசாயிகள், ஏழைகள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத் தப்படும் என்ற அறிவிப்பும் கடந்த ஆறு முறை நிதியமைச்சர் தாக்கல் செய்த வரவு-செலவு அறிக்கையில் இடம் பெற்றிருந்தது தான், ஆனால் செயல்பட்டிற்கு வந்ததா என்பதுதான் கேள்விக்குறி.
இந்திய பொருளாதாரம் 6.5 முதல் 7 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்றும், பண வீக்க விகிதம் 4.5 விழுக்காடு அளவு குறையுமென்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் நடைமுறையில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப் படவில்லை. உணவு பணவீக்கம் 7.5 விழுக்காடாக அதிகரித்ததால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்தன என்பதுதான் உண்மை நிலை ஆகும். வேளாண்மை துறைக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இரா.முத்தரசன் சாடல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
இந்திய நாடாளுமன்றத்தில் ஏழாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறார். அதிக முறை தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கையை ஒரே அமைச்சர் தாக்கல் செய்கிறார் என்பதை தவிர இதில் சாதனைகள் வேறு ஏதுமில்லை.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியவரை மய்யப்படுத்தியதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்று சொல்லப்பட்டாலும், இந்தத் துறைகளை பயன்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு அதிக பயன்கள் தரப்பட்டுள்ளன.
உயர் விளைச்சலுக்கான நூற்றுஒன்பது புதிய வகை தானியங்கள். எண்ணெய் வித்துக்கள் உருவாக்கப்படுவதாக சொல்லிக் கொண்டே, இயற்கை விவசாயத்தை மேம்படுத்தப் போவதாக கூறுவது முரண்பாடு நிறைந்ததாக உள்ளது.
ஏற்கெனவே விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கு வதற்கு 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இப்போது கிளஸ்டர் என்ற பெயரில் மீண்டும் அதே முயற்சி எடுக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்து நிதி நிலை அறிக்கையில் நிறைய பேசப்படுகிறது. ஆனால் புதிதாக சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கு முதல் மாதம் ஊதியத்தை அரசாங்கமே வழங்கும் என்றும், அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி தொகை பங்களிப்பை அரசே செலுத்தும் என்றும் சொல்வது, தொழிலாளர்களுக்கு அல்ல, முதலாளிகளுக்குத்தான் அதிக நன்மையை ஏற்படுத்தும். மேலும் இந்த வேலை வாய்ப்புகளும் நிரந்தரமானதாக அமைவதற்கான சாத்திய கூறுகளை பற்றி நிதிநிலை அறிக்கை ஏதும் பேசவில்லை.
மைனாரிட்டி அரசாங்கத்தை தாங்கிப் பிடிக்கிற அய்க்கிய ஜனதா தளத்தையும், தெலுங்கு தேசம் கட்சியையும் திருப்திப்படுத்துவதற்கு அரசு நிதி அள்ளிக் கொட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆந்திரப் பிரதேசத்துக்கு தனித்தகுதி அளிக்க மறுத்த பாஜக அரசு இப்போது அவர்கள் கேட்ட நிதியை வழங்கி இருக்கிறது.
சிறு குறு நடுத்தர தொழில்களை பாதுகாப்போம் என்ற பெயரில் ஏற்கெனவே சொல்லப்பட்ட எந்த திட்டங்களும் அவர்களை சென்றடையவில்லை என்பதே உண்மை. இப்போதும் அதே வார்த்தை ஜாலங்களின் தொகுப்பு தான் மீண்டும் தரப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பாலும் தொய்வடைந்து சுருண்டு வீழ்ந்துவிட்ட லட்சக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஆதாரத்தை உருவாக்கவும், மேம்பாடடையச் செய்யவும் உருப்படியான திட்டம் எதுவும் இல்லை. கார்ப்பரேட்டுகளின் வலுமிக்க தாக்குதலில் இருந்து இந்த சிறு குறு நடுத்தர தொழில்களை காப்பாற்றுவதற்கு பதிலாக, உலக அளவில் போட்டிக்கு இவற்றை தயார் செய்யப் போவதாக கூறுவது வெற்று உரை ஆகும்.
ஆனால் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டு காலம் போராடிய விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் ஏற்கப்படவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஒன்றிய அரசின் பாரா முகத்தாலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையாலும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு தள்ளப்பட்டனர். உடனடியாக இவற்றிலிருந்து மீள்வதற்கு நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை.
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று மோடி அரசு தந்த வாக்குறுதிகள் காற்றிலே பறந்தன. இந்நிலையில், தற்போது ரூபாய் 2 லட்சம் கோடி செலவில் 4.1 கோடி இளைஞர்களுக்கு அய்ந்தாண்டுகளில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி மட்டும் அளிக்கப்படும் என்று கூறியிருப்பதும், 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் படித்த இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வன்மையான கண்டனம்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த நிவாரணங்களையும் அளிக்கவில்லை. மாறாக கடந்த காலங்களை போலவே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்கி உள்ளது. தனது கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தி ஆட்சியை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கோடு ஆந்திராவுக்கும், பீகாருக்கும் கூடுதல் அறிவிப்புகளை
வெளியிட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவின் இதர மாநிலங்களை புறக்கணித்துள்ளது. குறிப்பாக, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டையே புறக்கணித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
நேற்றைய நாள் வெளியிடப்பட்ட பொருளதார ஆய்வறிக்கை, தனித்த பெரும்பான்மையில் பத்தாண்டுகள் ஆட்சி செய்த மோடி அரசின் தோல்வியை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 6.5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக வளர்ந்துள்ளது என்று பெருமை பேசிக் கொண்டாலும் துறை வாரியான, சமூக வளர்ச்சி ரீதியான புள்ளி விவரங்கள் மிகவும் கவலை அளிப்பதாகவே உள்ளன.
வேலையின்மை, விலையேற்றம், நிதி பற்றாக்குறை ஆகியவை கடந்த ஆண்டு மிகவும் மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியதாக ஆய்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலையேற்றம் 2023ல் 6.6 சதவிகிதமாக இருந்தது, 2024இல் 7.5 சதவிகிதமாக உயர்ந்தது என்பது சாதாரண மக்களுடைய உணவுப் பொருள் நுகர்வின் மீது மிகுந்த பாதிப்பை உருவாக்கியது. வேலையின்மையை சரிசெய்ய எந்த குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையே ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியது என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எம். எச். ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.
இன்று (23.7.2024) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-2025ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தெலுங்கு தேசம் மற்றும் m;aக்கிய ஜனதா தள கட்சிகளின் தயவோடு நடத்தப்படும் ஆட்சி என்பதனால் பீகாருக்கும் ஆந்திரப்பிரதேசத்துக்கும் மட்டும் சிறப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு உ;sபட பெரும்பாலான மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாடு அரசின் முக்கிய கோரிக்கைகளான வெள்ள நிவாரண நிதி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் சொல்லப்படவில்லை.
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாக கூறியுள்ளார். உண்மை நிலை அப்படியானதாக இல்லை என்பதனை மக்கள் அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்.
இந்த நிதிநிலை அறிக்கை அனைவரையும் உள் ளடக்கியது என்று பேசியுள்ள நிதி அமைச்சர் சிறு பான்மையினர் முன்னேற்றத்திற்கான அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீட்டையும் அறிவிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது. அதே போல் பட்டியல் இன மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான முன்னேற்றம் குறித்தும் அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும். இடைக்கால நிதிநிலை அறிக்கைகளையும் வெட்டி ஒட்டி இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதையும் புறந்தள்ள முடியாது.
ரயில்வே துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை இருந்ததை ஒழித்த மோடி அரசு இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலையில் ரயில்வே குறித்து ஒரு வரிகூட குறிப்பிடாதது கண்டனத்திற்குரியது
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறையாக நடத்தாமல். போதிய புள்ளிவிவரங்கள் இல்லாமல் வெறும் கற்பனை விவரங்களைச் சொல்லி மக்களை ஏமாற்ற ஒன்றிய அரசு முயல்கிறது. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை காற்று ஊதப்பட்ட பலூன் போன்றது தான்.
-இவ்வாறு எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.