விண்கல் குறித்த புதிய தகவல்களை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து 30 கோடி கி.மீ. தொலைவில் உள்ள, ‘ரியுகு’ என்ற விண்கல்லை ஆய்வு செய்ய ஜப்பான் கடந்த 2014ஆம் ஆண்டு, ‘ஹயபுசா 2’ என்ற விண்கலத்தை அனுப்பியது. நீண்ட பயணத்துக்கு பிறகு அந்த விண்கல்லில் தரையிறங்கிய ஹயபுசா, அங்குள்ள மாதிரிகளை சேகரித்து, கடந்த 2020 நவம்பரில் பூமிக்கு புறப்பட்டது. விண் கலத்தில் இருந்து விடுவிக்கப்படும் மாதிரிகள் அடங்கிய ‘கேப்சூல்’ ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஊமேரா நகரில் டிசம்பரில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ஹயபுசா-2 சுமந்து வந்த விண்கல் மாதிரிகளை ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், பல புதிய தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
சூரியக் குடும்பம் விண்கற்களால் நிறைந்துள்ளது. இவை பல்வேறு அளவுகளில் பாறைகளாக உள்ளன. அவை பிரதிபலிக்கும் ஒளியின் நிறமாலையை ஆய்வு செய்வதன் மூலம், மூன்று பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை, சி-வகை (அதிக கார்பன் உள்ளவை), எம்-வகை (உலோகங்கள் உள்ளவை) மற்றும் எஸ்-வகை (அதிக சிலிக்கான் கொண்டது). சூரியனை சுற்றி வரும் பெரும்பாலான விண்கற்கள் அடர்நிறம் கொண்ட சி-வகைகள். இதில், ஆவியாகும் சேர்மங்கள் நிறைந் துள்ளன. இவை பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போதே உடைந்து போகின்றன.
விண்கற்களில் 75% சி வகைகளாக இருந்தாலும் அவற்றின் மிச்சங்கள் பெரிய அளவில் நமக்கு கிடைப்ப தில்லை. இவைபூமியில் உயிர்களை உருவாக்குவதற்கு ஆதாரமாக இருந்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.