போலந்து முழுதும் பனிப்பொழியும் மாதங்கள் அதிகம். அதிலும் ஆண்டுக்கு சில மாதங்களாவது புகை மாசு மற்றும் பனி ஆகியவை ஏற்படுத்தும் மூட்டம், நகர்ப்புற போக்குவரத்தையே நிறுத்தும் அளவுக்கு இடர் தரக்கூடியது.
இந்த சவாலுக்கு தீர்வாக ஒலி பீரங்கிகளை பயன் படுத்தலாம் என்கின்றனர், போலந்து விஞ்ஞானிகள்.
முதற்கட்ட சோதனையாக, கல்வாரியா ஜெப்ரி டோவ்ஸ்கா என்ற நகரில், விஞ்ஞானிகள் ஒலி பீரங்கி சோதனையை நடத்தி வெற்றிகண்டுள்ளனர்.
தலைகீழாக கவிழ்த்தப்பட்ட கூம்பு வடிவிலான ஒரு கருவிக்குள், காற்று மற்றும் அசிட்டலின் ஆகியவை கலந்த கலவை எரியூட்டப்படும். இதனால், வெடிச் சத்தத்துடன் கூம்புக்குழாய் வழியே அதிர்வலை வான் நோக்கி வெளியேறும். இந்த அதிர்வலையின் தாக்கத்தில், காற்றில் உள்ள கனமான மாசுத் திவலை களும் சேர்ந்து சில மீட்டர் உயரத்திற்கு தள்ளப்படும்.
ஒலி பீரங்கியை ஒரு மணி நேரம் பயன்படுத்தினால், சில சுற்றளவுக்கு மூட்டம் விலகி காட்சிகள் தெளி வாகத் தெரியும். இதனால், தரை மட்டத்தில் 30 சதவீதம் வரை காற்றில் மாசுத் திவலைகள் குறையும்.
ஒலி பீரங்கி ஏற்படுத்தும் காட்சித்தெளிவு அதிக பட்சம் 3 மணி நேரம் வரை நீடிக்கும்.ஒலி பீரங்கியின் சில வினாடி நேர வெடிச் சத்தம் மட்டும் தான் இதில் உறுத்தலான அம்சம். ஆனாலும் அது மாசை விரட்டுவதால் அதை பொறுத்துக் கொள்ளலாம் என, போலந்து மக்கள் கருதுகின்றனர்.
ஒலி அலையால் மாசை விரட்டலாம் என்பது விந்தைதான்!