தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு முதல், ‘தகைசால் தமிழர் விருதினை’ ஏற்படுத்தி, தமிழ்நாட்டுப் பொது வாழ்வில் அளப்பரிய பணியாற்றும் மூத்த பழம்பெரும் தலைவர்களுக்கு வழங்கி வருகிறது. 2021ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் என். சங்கரய்யா (வயது 102) அவர்களுக்கும், அடுத்த ஆண்டு 2022இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்ல கண்ணு (வயது 98) அவர்களுக்கும் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
2023ஆம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி (வயது 90) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு விடுதலை நாளான ஆகஸ்டு 15 அன்று தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட் டையில் நடைபெற்ற விழாவில் தனிச்சிறப்புடனும் பெருமையுடனும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங் கப்பட்டது.
மூத்த தோழர்கள் என். சங்கரய்யா – ஆர். நல்ல கண்ணு ஆகியோரின் பிறந்த நாள்களில் அவர்களது இல்லம் சென்று தலைவர்களை வாழ்த்திடும் பணியினை வழக்கமாகவே தமிழர் தலைவர் கொண்டிருப் பவர். நடப்பாண்டு விருது அறிவிக்கப்பட்ட நிலையில், தோழர் ஆர். நல்லக்கண்ணு தொலைபேசியில் தமிழர் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தபொழுது, அவரிடம் நேரில் வந்து சந்திப்பதாக தமிழர் தலைவர் கூறினார்.
தனக்கு விருது வழங்கப்படுவதற்கு முன்பே பல்வேறு சந்திப்பு, வெளியூர் பயணங்கள், கூட்டங்க ளிடையே எப்படியும் மூத்த தலைவர்களைச் சந்தித்துவிட வேண்டுமென்று உறுதியுடன் இருந்தார். சரியாக ஆகஸ்டு 14ஆம் நாள் மாலையில் கொட்டும் மழையில் சென்னை- அடையாறு வீட்டிலிருந்து தமிழர் தலைவர் புறப்பட்டு நந்தனம் பகுதியில் தாமரைக் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள அய்யா ஆர்.என்.கே. அவர் களது இல்லம் சென்றடைந்தார். தாம் வருவது குறித்து தகவல் சொல்லியிருந்ததால் தோழர் ஆர்.என்.கே. அவர்களும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருந்தார். தமிழர் தலைவர் வந்ததும், அவரை வரவேற்று தனது இருக்கையில் அமர்ந்திட தோழர் ஆர்.என்.கே. அவர்கள் அழைத்ததும், தமிழர் தலைவர், தோழரை அவரது இருக்கையிலேயே அமரச் செய்து அருகில் இருந்த இருக்கையில் தான் அமர்ந்தது, இருவரது சந்திப்பின் தொடக்கமே பொது வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டிய பண்பாட்டினை பறைசாற்றியது.
தோழர் ஆர்.என்.கே.வும் தமிழர் தலைவரும்
முதலில் தோழர் ஆர்.என்.கே அவர்கள் தமிழர் தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பட்டாடை போர்த்தி, பொதுவுடைமை, மார்க்ஸ் பற்றிய புத்தகங்கள் வழங்கினார். பின்னர் தமிழர் தலைவர், மூத்த விருதாளரான தோழர் ஆர்.என்.கே. அவர்க ளுக்கு பயனாடை அணிவித்து ‘விடுதலை தொகுதி-மி’ மற்றும் தந்தை பெரியாரின் புத்தகங்களை மகிழ்ச்சி யோடு வழங்கினார்.
ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். பேச்சினிடையே உடல்நலம் பற்றி விசாரிப்பு வந்ததும், ஒரு கட்டத்தில் ஆர்.என்.கே. அவர்கள் தனக்கு சர்க்கரை தொடர்பான பிரச்சினை மற்றும் இதய தொடர்பான இன்னல்கள் ஏதும் இல்லை எனக் கூறினார். உடனே தமிழர் தலைவர் அவரது அந்த நல்ல உடல் நிலைக்கு, தொடக்க காலத்தில், தோழர் ஆர்.என்.கே. அவர்கள் விவசாயிகள் சங்கத்தில் பொறுப்பேற்று பல்வேறு பணிகள், பயணங்கள, போராட்டங்கள் என ஈடுபட்டதுதான் முக்கிய காரணம் எனக் கூறினார்.
அந்த அருமையான சந்திப்பை காட்சிப்படுத்திட அப்பொழுது அருகிலிருந்த ‘எதிர்பிம்பம்’ யு.டி.யூப் அலையின் ஊடகவியலாளர் தமிழர் தலைவரிடமும் தோழர் ஆர்.என்.கே. ஆகிய இருவரிடமும் குறுங் கருத்து (தீஹ்tமீ) பெற்றார்.
விருது பெறவிருக்கின்ற ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு பாராட்டுகள். எங்களது இயக்கப் பணிகளின் தொடர்பு நெடுநாளையது. தந்தை பெரியார், சிங்காரவேலர் காலம் தொடங்கி திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் இணைந்து சமுதாயப் பணி ஆற்றி வந்துள்ளன என்று தோழர் ஆர்.என்.கே. குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் வருவதற்கு முன்பே, அண்மையில் நாங்குநேரியில் ஏற்பட்ட ஜாதி வெறித் தாக்குதல் குறித்து தோழர் ஆர்.என்.கே. அந்நாளில் அதே ஊரில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும், இன்னும் ஜாதி வெறி ஓய்ந்த பாடில்லை எனவும் மிகவும் உருக்கமாகப் பேசியிருந்தார்.
தமிழர் தலைவர் கருத்து தெரிவிக்கையில் நாங்குநேரியில் மட்டுமல்ல- தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லையில் திரு வைகுண்டம் போன்ற ஊர்களில் தோழர் ஆர்.என்.கே. ஜாதி அடக்கு முறையை எதிர்த்து நடத்திய போராட்டங் களையும் நினைவு கூர்ந்தார். மேலும் நாகர்கோவிலில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தாங்கள் இருவரும் கலந்துகொண்டு, பின்னர் ஒரே வாகனத்தில் நள்ளிரவில் மதுரை வரை பேசிக் கொண்டே பயணம் செய்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
தீண்டாமை என்பது ஜாதி அடக்குமுறையின் வெளிப்பாடு. தீண்டாமையை களைந்துவிட்டால் மட்டும் அடக்குமுறை ஒடுங்கிவிடாது; ஜாதிகள் ஒழிக் கப்பட வேண்டும்; ஜாதி ஒழிந்தால்தான் தீண்டாமை ஒழியும். நாங்குநேரியில் நடந்த ஜாதி வெறிச் செயல் குறித்து பேசுகையில், நாலாயிரம் ஆண்டுகளாக நிலவி வருவதை அமைதி வழியில் சென்று குறுகிய காலத்தில் ஒழிப்பது கடினம். ஜாதி உணர்வுகளைத் தூண்டும் வர்ணாஸ்ரம கோட்பாடுகளை பிரச்சாரம் செய்திடும் பாசிச சக்திகள் தலைதூக்கி வரும் காலம் இது. ஜாதிப் பெருமைகளை ஊக்குவிக்கும், அத்தகைய மதவெறி சக்திகளை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். கூட்டு இயக்கப் பணியாகவே நடத்தப்படும்.
தந்தை பெரியார் எதிர்த்துப் போராடிய, சேரன்மா தேவி குருகுலத்தில் பயிலும் மாணவர்கள் ஜாதிப் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதன், நூற்றாண்டு நடைபெறுகிறது. திராவிடர் கழகத்தின் சார்பாக, ஒத்த கருத்துடையோரையும் இனணத்துக் கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து தொடர் பிரச்சாரத்தை ஆரம்பித்து, சேரன்மாதேவியில் நிறைவு செய்து, ஜாதிவெறி ஆணவத்துக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதற்கான அறிவிப்பினை வெளியிடுவோம்.
தொடர்ந்து அய்யா ஆர்.என்.கே. போன்றவர்களின் ஆலோசனைகளையும் பெற்று ஜாதி வெறியினை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும். ஜாதி இருக்கும் வரை வெறி வெளிப்படத்தான் செய்யும். ஜாதி ஒழியும் வரை போராட்டங்கள் தொடர வேண்டும் என தமிழர் தலைவர் பேசி முடித்தார்.
பெய்த மழை சற்று ஓய்ந்த நிலையில் தோழர் ஆர்.என்.கே. அவர்களிடம் தமிழர் தலைவர் விடை பெற்றார். அறையிலேயே இருந்திட தோழர் ஆர்.என்.கே. அவர்களை தமிழர் தலைவர் வேண்டிக் கேட்டுக்கொண்ட பின்பும், வெளியில் வந்து வாகனத் தில் தமிழர் தலைவர் ஏறும்வரை இருந்து வழியனுப்பி விடை கொடுத்தார்.
தோழர் என். சங்கரய்யா இல்லம் நோக்கி…….
தாம்பரம் – குரோம்பேட்டையிலுள்ள முதுபெரும் தோழர் நூறாண்டு கண்ட போராளி, தோழர். என். சங்கரய்யா இல்லம் நோக்கி தமிழர் தலைவர் பயணித்தார். தாம்பரம் நெருங்க நெருங்க, பெய்த மழையின் தீவிரமும் அதிகமாகியது. குரோம்பேட்டை யில், தாம்பரம் பகுதி தோழர்கள் மாவட்ட தலைவர் முத்தையனுடன் தமிழர் தலைவர் வரும் வழியில் காத்திருந்து அழைத்துச் சென்றனர்.
தோழர் என். சங்கரய்யா அவர்கள் தமிழர் தலை வரைப் பார்த்ததும் ‘கணீர்’ குரலில் வரவேற்று மகிழ்ந்தார். இருக்கையில் இருந்துகொண்டே உரை யாடினாலும் என். சங்கரய்யா அவர்களின் ஆழ்ந்த பார்வைக் கூர்மை, பேசும் பொருள் தெளிவு, பேசும் குரல் இவையனைத்தையும் கவனிப்பவர் அவர் நூறாண்டுக் கடந்தவர் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தமிழர் தலைவருக்கு தோழர் என். சங்கரய்யா அவர்கள் சால்வை அணிவித்து விருது பெறுவதற்கு பாராட்டும், தோழர் என்.எஸ். அவர் களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து மரியாதையும் தெரிவித்தனர்.
தமிழர் தலைவரும், தோழர் என்,.எஸ். அவர்களும் அருகருகே அமர்ந்து உடல்நலம் குறித்து ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர். வீட்டில் இருந்த தோழர் என்.எஸ். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மூத்த தலைவர்களான தகைசால் தமிழர் விருதாளர்களுடன் சேர்ந்து ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். தோழர் என்.எஸ். அவர்கள், தங்களது குடும்பத்தவரையும் பொதுநலம் பற்றிய அக்கறை உள்ளவர்களாக வளர்த்துள்ளதை நேரில் அறிய முடிந்தது.
தோழர் என்.எஸ். அவர்களின் மருமகள் தமிழர் தலைவரிடம் மதவெறியினை எதிர்த்து வலுவான பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்; அதற்கு அய்யா ஆவன செய்திட வேண்டும் என்ற ஆவலைத் தெரிவித்த நிலையில், தமிழர் தலைவர் தமிழ்நாடெங்கும் பரந்துபட்ட பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அந்தப் பிரச்சாரத்தின் பலன் எதிரொலிக்கும் எனக் கூறினார். தோழர் என்.எஸ். அவர்களுக்கு ‘விடுதலை’ ஏட்டினை அஞ்சலில் தொடர்ந்து அனுப்பிட எங்களைப் பணித்தார்.
மிகவும் கலகலப்பான குடும்பச்சூழல், பெரியார் இயக்கத் தோழர்கள், தோழர் என்.எஸ். அவர்களின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பது – குறிப்பாக தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் கமலக்கண்ணன் இருப்பதையும் நேரில் பார்த்திட முடிந்தது.
தோழர் என்.எஸ். அவர்களிடம் தமிழர் தலைவர் விடை பெற்றுக் கிளம்புகையில் தமிழர் தலைவரை வாழ்த்தி வழியனுப்பினர். தோழர் என்.எஸ் அவர் களின் குடும்பத்தார் வீட்டிற்கு வெளியில் வாகனம் வரை வந்து தமிழர் தலைவரை அனுப்பி வைத்தனர்.
தனக்கு ‘தகைசால் தமிழர் விருது’ அறிவிக்கப்பட்ட நிலையில்- அடுத்த நாள் விருது வழங்கப்படும் நிலையில் – அந்த விருதை முன்னரே பெற்ற மூத்த தலைவர்களைச் சந்திப்பதை தனது கடமையாகக் கருதி, பல்வேறு பணிச்சுமை, பார்வையாளர் சந்திப்பு ஆகியவற்றை கடந்து சரியான நேரத்தில் தமிழர் தலைவர் செய்து முடித்தார்.
தகைசால் தமிழர் விருது பெற்ற – பெறவிருந்த, தலைவர்களிடம் நிலவிய சமுதாயப்பணிக்கான அர்ப்பணிப்பு உணர்வு அபரிமிதமாகவே இருந்ததைப் பார்க்க முடிந்தது. தாம் 90 வயதை கடந்துவிட்டதை அடிக்கடி பிறர் நினைவூட்டும் சூழலில், தன்னிலும் மூத்த தலைவர்களை சந்தித்து தம்மை மேலும் இளமைப்படுத்திக் கொள்வதாக வெளிப்படையாகவே தமிழர் தலைவர் அந்த இரு தலைவர்களிடமும் தெரிவித்த பாங்கு, இந்த சமுதாயத்திற்கு இளமை உணர் வுடன் இருந்து என்றைக்கும் பணிபுரிய வேண்டும் என்பதனை வெளிப்படுத்துவதாகவே விளங்கியது.
விடுதலை நாளான 15.08.2023 அன்று தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது பெற்ற தமிழர் தலைவர் அதற்கு முன்னால் தோழர் என். சங்கரய்யா மற்றும் தோழர் ஆர் நல்லக்கண்ணு ஆகிய இரு தலைவர்களையும் சென்று சந்தித்து, மரியாதை செய்து உரையாடியது, தகை சார்ந்த செயலாகவே விளங்கியது.