ஒன்றிய அரசு பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம்
சென்னை, ஜூலை 20 திமு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
150 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய் யப்பட்ட நிலையில், எந்த விவாதமும் இல்லாமல் புதிய குற்றவி யல் சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநில அரசு களின் ஆலோசனைகளைப் பெறாமல், சில பிரிவுகளை மாற்றம் செய்து, சட்டங்களை சம்ஸ்கிருத மயமாக்கி உள்ளனர். இது பல தரப்பின ருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குற்றமாக்கப்பட்டுள்ளது. குற்றங்களுக்கான தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப் பாக ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் எனக்கூறியுள்ள நிலையில் தண்டனைக் குறைப்பு வழங்கும் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருடைய அதிகாரம் பறிக்கப் பட்டுள்ளது.
காவல் துறையினருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கொலை, ஆசிட் வீச்சு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு கைவிலங்கு பூட்டுவதன் மூலம் தனிநபர்சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர்,என்.செந்தில்குமார் அமர்வில் வழக்கு நேற்று (19.7.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, “அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்களின் பெயர்கள் இயற்றப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், சம்ஸ்கிருதத்தில் இந்தபுதிய சட்டங்களுக்கு பெயர் சூட்டியிருப்பது அரசமைப்பு சட்டத்துக்கு விரோத மானது” என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல்.சுந்தரேசன் கோரினார்.
இதையடுத்து, “புதிய சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன. சிவில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தபோதும் இதேபோல எதிர்ப்பு இருந்தது, இதுதொடர்பாக சட்ட ஆணையத்தை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர். ஒன்றிய அரசு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி இதை ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிடவும் அறிவுறுத்தியுள்ளனர்.