ஜெய்ப்பூர், ஆக.18 ராஜஸ்தானில் பாஜக அமைத்துள்ள இரு தேர்தல் குழுவிலும் மேனாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் பெயர் இடம் பெறவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை முன்னிறுத்தியே பாஜக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. மேனாள் முதலமைச்சரும் மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
2018-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் ராஜஸ்தானில் பாஜக அதிக தொகுதிகளை இழந்து தோல்வியைத் தழுவியதால் பாஜக தலைமைக்கு வசுந்தரா ராஜே சிந்தியா மீது அதிருப்தி உள்ளதாக தெரிகிறது. 70 வயதாகும் வசுந்த ராவுக்கு பதிலாக அடுத்த கட்டத் தில் உள்ள இளம் தலைவரை முதல்வராக்க பாஜக தலைமை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் வேட்பாளரை தேர்தலுக்கு முன்பே அறிவித்தால் வசுந்தரா ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்பதால் அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டில்லியில் 16.8.2023 அன்று பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர் பாக ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில தேர்தல் நிர்வாகக் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப் புக் குழு ஆகியவை அறிவிக் கப்பட்டன.
பாஜக மாநிலத் தலைவர்சி.பி.ஜோஷி, ராஜஸ்தான் மாநில பாஜக பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோர் இக்குழு தொடர்பான விவரத்தை வெளியிட்டனர்.
மேனாள் எம்.பி. நாராயண் பஞ்சாரியா தலைமையிலான 21 போர் அடங்கிய தேர்தல் நிர்வாகக் குழுவிலும், ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிலும் வசுந்தரா ராஜே சிந்தியா பெயர் இடம் பெறவில்லை.