லக்னோ, ஜூலை 19- உத்தரப்பிரதேசம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சண்டிகரிலிருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் நோக்கி நேற்று (18.7.2024) சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயில் சென்றுக்கொண்டிருந்தது. இது உத்தரப் பிரதேசத்தின் கோண்டா பகுதியில் கோங்கா – ஜிலாஹி இடையே பிற்பகல் 2.35 மணியளவில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியிருக்கிறது. மொத்தம் 12 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்தையடுத்து உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். மேலும் ரயில்வே விபத்து மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தகவலையடுத்து 40 பேர் கொண்ட மருத்துவக்குழுவும், 15 ஆம்புலன்ஸ்களும் நிகழ்வு இடத்திற்கு விரைந்திருக்கின்றன. இதுவரை 20 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல, 4 பேர் வரை பிணங்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இதனை உ.பி துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார். கோண்டா மாவட்ட ஆட்சியர் நேஹா ஷர்மாவும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. 4 பேர் உயிரிழந்ததாக பதிவாகி இருக்கிறது. மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தயாராக இருந்த அனைத்து ஆம்புலன்ஸ்களும் நிகழ்வு இடத்தை அடைந்துள்ளன. மீட்புப் பணியில் உள்ளூர் மக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள்” என தெரிவித்திருக்கிறார்.
அதேபோல முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “கோண்டா மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந் தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் நிவாரணம் அறிவித்திருக்கிறது. அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக் கப்பட்டிருக்கிறது. அதேபோல ரயில்வே பாதுகப்பு ஆணையம் மற்றும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.