தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
திண்டுக்கல், ஜூலை 19- தமிழ் நாடு விவசாயிகளின் உரி மைக்காக கருநாடக அரசுக்கு எதிராக காங் கிரஸ் போராடும் என்று மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார்.
திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று (18.7.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கொலை யின் பின்னணியில் இருக்கும் அனைவரையும் கண்டறிய வேண் டும். பா. ஜனதா மகளிர் அணி நிர்வாகியை காவல்துறையினர் தேடுவதாகவும், பா.ஜனதாவை சேர்ந்த சிலரை கைது செய்ததாகவும் தகவல் வருகிறது. காந்தியார் படு கொலை முதல் தற்போது வரை நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையிலோ அல்லது அவர்களின் குடும்பத்தையோ விமர்சனம் செய்தது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் புதிதாக அவதாரம் எடுத்துள்ள ஒரு தலைவர், ஜெயலலிதா முதல் நீதியரசர் சந்துரு வரை விமர்சிக்கிறார். தலைவர்களின் குடும்பத்தை விமர்சிக்கிறார். எந்த அரசியல் தலைவரும் இவ்வாறு தரம்தாழ்ந்து விமர்சனம் செய்தது இல்லை.
காவிரிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை, கருநாடக அரசு வழங்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சிக்க கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக கருநாடக அரசுக்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராடவும் தயாராக இருக்கிறது. உச்சநீதிமன்றம் மற்றும் மேலாண்மை வாரியம் ஆகியவற்றின் தீர்ப்பை கருநாடக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றால் ஒன்றிய அரசு தலையிட வேண்டும்.
ஆனால் கருநாடகாவை சேர்ந்தவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. எனவே பா.ஜனதா தான் பின்னணியில் இருந்து சித்து விளையாட்டில் ஈடுபடுகிறது. உதய் மின்திட்டத்தில்தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. எனினும் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல், மின்கட்டண உயர்வை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும். – இவ்வாறு அவர் கூறினார்.