கடைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்டுக! அமைச்சர் சாமிநாதன் வலியுறுத்தல்

viduthalai
2 Min Read

காஞ்சிபுரம், ஜூலை 19 “கடைகளில் தமிழில் அவசியம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நலத் துறையும் இணைந்து உத்தரவிட்டுள்ளோம்” என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா நேற்று (18.7.2024) காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியது: “நமது அரசு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடி வருகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு இடங்களில் நடத்தும் இந்த விழாவை இந்த ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணா பிறந்த மண்ணில் கொண்டாடுகிறோம். சென்னை மாகாணம் என்றிருந்த நமது மாநிலத்துக்கு இந்த ஜூலை 18-ஆம் தேதி அறிஞர் அண்ணாவால் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

அவரின் வழியொற்றி நடைபெறும் தமிழ்நாடு அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று திட்டங்கள் தீட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அண்ணா பிறந்த இந்த மண்ணில்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் பெண்களுக்கான புதுமைப் பெண் திட்டம் போன்றவை அமல்படுத்தப்படுகின்றன.

இந்த திட்டம் இப்போது மாண வர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுளளது. நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டுள்ளன. அண்ணா, கலைஞர் போன்றவர்கள் தங்கள் பேச்சாலும், எழுத்தாலும் இந்த சமுதாயத்தை மாற்றிக் கட்டியவர்கள். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாள் குறித்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு உருவான வரலாறு குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்,” என்றார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழ் வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன. இதனை அவசியம் வணிகர்கள் பின்பற்ற வேண்டும்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஆழி.செந்தில்நாதன், பர்வீன் சுல்தானா, உள்ளிட்ட பலர் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வாழ்வும், வரலாறும், சென்னை மீட்பு வரலாறு உள்ளிட்ட தலைப்புகளில் பேசப்பட்டன. மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழி லரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் க.பவானி நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *