அம்பத்தூர், ஜூலை 18- அம்பத்தூர் அருகே துப்பாக்கி முனையில் ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ரவுடிகள் ஒழிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் எச்சரிக்கை செய்யப் பட்டு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி காவல்துறையினர் அவர்களது பகுதியில் உள்ள ரவுடிகளை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஆவடி காவல்துறை ஆணையர் தலைமையிலான ரவுடி ஒழிப்பு காவல் துறையினரும், செங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர் ராஜா ராபர்ட் தலைமையிலான தனிப்படை காவல்துறையினரும் ரவுடிகளை கண் காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
துப்பாக்கி முனையில் கைது
இந்தநிலையில் நேற்று (17.7.2024) அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு ஏரிக்கரை பகுதியில் சோழவரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான சேது என்ற சேதுபதி (வயது 30) பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ரவுடியான சேதுபதி மீது மாதவரம், மீஞ்சூர், காட்டூர், புழல், சோழவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 5 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள் கடத்தல், தொழில் அதிபர்களை மிரட்டுதல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் அவர் தலைமறைவாகி இருந்தார்.
தனிப்படை காவல்துறையினர் பக்கத்தில் நெருங்கியதும் சேதுபதி தப்பியோட முயற்சித்தார். இதனால் காவல்துறையினர், சேதுபதியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு காவல்துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட முத்து சரவணனுக்கு எதிரணியாக சேதுபதி செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம்
ஒரே நாளில் 3 அடி உயர்வு
ஒகேனக்கல், ஜூலை 18- கருநாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கருநாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் கபினி அணை மட்டும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி விட்டது. மற்ற அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 35,997 கனஅடி தண்ணீர் வந்து கொண் டிருந்த நிலையில் நேற்று காலை அது வினாடிக்கு 36,674 கனஅடியாக அதிகரித்துள்ளது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 110.60 அடியை எட்டி உள்ளது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 109.10 அடியாக இருந்தது.
இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 29,310 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 33,640 ஆக உயர்ந்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் கபிலா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் நடைபாதைக்கும் மேலே தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. கடந்த 16ஆம் தேதி 44.62 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 47.78 அடியாக உயர்ந்தது. அணையின் கொள்ளளவு 21.52 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது.
நீலகிரி, கோவை
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் தற்போது, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், தென்மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று முன்தினம் (16.7.2024) நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 37 செ.மீட்டர் அதிகனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, அவலாஞ்சியில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்தன.
இந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல், தென் வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.