சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 15- கருநாடகாவில் டெங்கு பரவல் எதிரொலியாக தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
கருநாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகி யுள்ளன. எனவே, தமிழ்நாட்டின் எல்லையோர மாவட் டங்களில் அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, எல்லையோர மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து காலி இடங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதுடன் கொசு உற்பத்தி ஆகாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பூச்சியில் நிபுணர்களுடன் இணைந்து டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் பரவுவதற்கு வழி வகுக்கும் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதைத் தடுக்க மக்கள் பயன்படுத்தும் நீரில் குளோரினேஷனை உறுதி செய்யவும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களின் வளாகங்கள் ஏடிஸ் கொசு இல்லாத வளாகமாக உருவாக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் பிரத்யேக காய்ச்சல் வார்டு உருவாக்கப்பட்டு கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும். டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையாக மருந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதனால் காய்ச்சல், டெங்கு இறப்புகளை தவிர்க்க முடியும். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கும் சுகாதாரக் கல்வி குறித்தும் தங்கள் வீடுகள் மற்றும் வளாகங்களை கொசு உற்பத்தி இல்லாமல் வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகாய் நியமனம் –
கொறடாவாக கொடிக்குன்னில் சுரேஷ்
புதுடில்லி, ஜூலை 15- மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் மற்றும் தலைமைக் கொறடாவாக கொடிக் குன்னில் சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான கடிதம் மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர், தலைமை கொறடா மற்றும் மக்களவை காங்கிரஸ் கட்சியின் 2 கொறடாக்கள் நியமனம் தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித்தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணு கோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:
நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக கவுரவ் கோகய் செயல்படுவார். கேரளாவில் இருந்து 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் கட்சியின் தலைமை கொறடாவாக இருப்பார். விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் கிஷன் கஞ்ச் மக்களவை உறுப்பினர் முகமது ஜாவேத் ஆகியோர்மக்களவையில் கட்சியின் கொறடாக்களாக இருப்பர். இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட நிலையில், இந்த புதிய நியமன அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் மக்களின் கோரிக்கைகளுக்காக மக்களவையில் வீரியத்துடன் குரல் கொடுக்கும் என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.