ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே நாட்டுக்கு எந்தவொரு நல்லதும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாஜக ஆட்சியில் மக்கள் நலனுக்குப் பதிலாக பெரிய தொழிலதிபர்களின் நலன்களே பேணிப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் விலைவாசி உயர்வு மட்டுமின்றி வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடுகிறது.
இதனை எதிர்க்கட்சிகள் – பொது மக்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வரும் நிலையிலும், இதனைக் கண்டு கொள்ளாமல் ஒன்றிய பாஜக அரசு இருந்து வருகிறது. நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தின் நிலை ஆண்டுதோறும் அதிகரித்தே காணப்படுகிறது. இதுகுறித்து பேசச்சொன்னால், படித்தவர்களும் பக்கோடா விற்றுக் கூட பிழைக்கலாம் என்று பிரதமர் மோடியே கூறவில்லையா?
இவ்வாறு வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துக் காணப்படும் நிலையில், தற்போது குஜராத் மாநிலத்தில் தனியார் வேதிப்பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செக்யூரிட்டி வேலை குறித்த விளம்பரம் ஒன்றை வெளியிட்டது, குறிப்பிட்ட விடுதி ஒன்றில் அதற்கான நேர்காணல் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, ஊதியமாக 10 ஆயிரம் ரூபாய் என்றும் 12 மணி நேர வேலை என்றும் குறிப்பிட்டு விளம்பரம் வெளியான நிலையில், குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள அக்லேஷ்வர் என்ற நகரத்தில் உள்ள தனியார் விடுதி முன் பட்டதாரிகள் உள்பட 5000 த்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த காட்சிப் பதிவு இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் அதிகமாக அதிகமாக விடுதியின் வெளிப்புறம் இருந்த தடுப்பு உடைந்து விழுந்தது,
அப்போது பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது தான் மோடி கூறிய குஜராத் மாடல் – பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். அது மட்டுமல்ல. மோடி இங்கு தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘‘வாயால் வடை சுடுவது’’ என்ற சொலவடை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கு மட்டும் நூற்றுக்கு நூறு துல்லியமாகவே பொருந்தும்.
அதானி, அம்பானிகளைக் கொழுக்க வைப்பதும், வரிகளைத் தள்ளுபடி செய்வதும் வாராக் கடன் பட்டியலை விரிவாக்குவதும்தான் மோடி அரசின் இமாலய சாதனை.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடன் அதானியையும் அழைத்துச் சென்று, அவ்வரசுடன் அதானி நிலக்கரி தொழிற்சாலை ஒப்பந்தம் செய்வதற்கு உதவியது மட்டுமல்ல; அதானிக்குக் கடன் வழங்க வங்கி அதிகாரியையும் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லையா?
இந்த நிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி எல்லாம் மோடி அரசுக்கு எப்படி அக்கறை இருக்க முடியும்?