சென்னை, ஜூலை 14 நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10.7.2024 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் 13 தொகுதிகளிலும் நேற்று (13.7.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், அனைத்து தொகுதி களிலும் கட்சி வாரியாக பெற்ற வெற்றி விவரங்கள் வெளி வந்துள்ளன. இதன்படி, பீகாரில் ரூபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இமாசல பிரதேசத்தில் 2 இடங்களில் காங்கிரசும், பா.ஜனதா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் வெற்றி பெற்றுள்ளன.
இதேபோன்று தமிழ்நாட்டில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்டில் 2 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், இந்த இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மத்திய பிரதேசம் மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா 1 தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.
தொல். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளத்தில், “தமிழ்நாடு மற்றும் பிற மாநில மக்கள் பா.ஜனதா கூட்டணிக்கு மீண்டும் பாடம் புகட்டியுள்ளனர். ஜாதி, மத, பிற்போக்கு சக்திகளை அனு மதிக்கமாட்டோம் என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளதை 13 சட்டப்பே ரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
விக்கிரவாண்டி இடைத்தேர்த லில் தி.மு.க. கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ள வாக்காளர்களுக்கு வி.சி.க. சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாக்காளர்களை குறைத்து மதிப்பிடும் குறை மதியாளர்கள், பொது மக்களிடையே வலுப்பெற்றுள்ள அரசியல் புரிதலை இன்னும் புரிந்து கொள்ளாமல் தங்களின் தோல்விக்கு வேறு காரணங்களை தேடுகின்றனர்.
நாடு முழுவதும் 13 இடங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் 10 இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை வழங்கியுள்ள மக்களுக்கு நன்றி” என்று அதில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது:- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் ஜாதிய, மதவெறி சக்திகளை முற்றாக நிராகரித்து, தி.மு.கழக வேட்பாளர் அன்னியூர் சிவாவை மகத்தான வெற்றி பெறச் செய்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியால் நிலை குலைந்து போன அ.இ.அ.தி.மு.க. தேர்தல் களம் இறங்கவில்லை.
இந்த நிலையில் பா.ம.க., அ.இ.அ.தி.மு.க. வாக்குகளை பெறலாம் என்ற ஆசையுடன் அலைந்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஜாதிய, மதவெறி சக்திகளுக்கு அரசியல் தளத்தில் இடமில்லை என்பதை விக்கிரவாண்டி மக்கள் நெற்றியடி தீர்ப்பாக வழங்கியுள்ளனர்.கடந்த 2021 முதல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை உள்வாங்கி நலத்திட்டங்களையும், இளைய தலைமுறையினரின் திறனை வளர்க்கும் ஊக்கம் தரும் திட்டங்களையும் செயல்படுத்தி வருவதுடன், வகுப்புவாத, பாசிச ஜனநாயக விரோத சக்திகளை எதிர்த்துப் போராடிவரும் கொள்கை உறுதி கொண்ட தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலுப்ப டுத்தும் வகையில் மக்கள் தீர்ப்பு அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷ சாராயச் சாவுகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடிய மலிவான செயலை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
சார்பற்ற நடுநிலை நீதி பரிபாலன முறைக்கு எதிராக பா.ஜ.க. அமலாக்க முயற்சிக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களையும், மாணவர் சமூகத்தின் மருத்துவக் கல்வி கனவை சிதைத்து வரும் நீட் தேர்வில் நடந்த ஊழல், முறைகேடுகளையும் எதிர்த்து, நீட் தேர்வு முறையில் தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு கோரி வருவதை ஆதரித்து தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்கிறது என்கிற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இடைத்தேர்தல் வழியாக வெளிப்படுத்திய விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதி மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67, 169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி ருக்கிறார். எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. ஆதரவு பெற்ற பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்திருக்கி றார்கள். சமூக நீதி கொள்கையை அடகு வைத்து பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்து போட்டி யிட்ட பா.ம.க. படுதோல்வி அடைந்திருக்கிறது.விக்கிரவாண்டி மக்கள் பா.ம.க.வுக்கு சரியான பாடத்தை புகட்டியிருக்கிறார்கள்.
இதன்மூலம் கடந்த மூன்றாண்டு களுக்கு மேலாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி நல்லாட்சி நடத்தி வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை மீது நம்பிக்கை வைத்து அமோக வெற்றியை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மக்கள் வழங்கியிருக்கிறார்கள். சமீபகாலமாக எதிர்க்கட்சிகள் பரப்பி வந்த ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி இடைத்தேர்தல் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள். கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று வருகிற தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கிற வகையில் விக்கிரவாண்டி தேர்தல் தீர்ப்பு அமைந்துள்ளது.
அதேபோல, பல்வேறு மாநிலங்க ளில் நடைபெற்ற 13 இடைத் தேர்தல்களில் 11 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டியதைப் போல இடைத் தேர்தலிலும் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதை இடைத்தேர்தல் தோல்விகள் உறுதி செய்கின்றன.
ராகுல்காந்தி மேற்கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இனி வருகிற காலங்களில் தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை இடைத்தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளன.விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.