திருச்சி, ஜூலை 13- 11.07.2024 அன்று உலக மக்கள்தொகை நாளினை முன்னிட்டு திருச்சி மாவட்ட மருத்துவம், ஊரகப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக காலை 8.30 மணியளவில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கிவைத்து சிறப்பித்தார். 50க்கும் மேற்பட்ட மருந்தியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இப்பேரணி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் துவங்கி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியின் கலையரங்கத்தில் நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உலக மக்கள்தொகை நாள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகளின் இணை இயக்குநர் மருத்துவர் சுபிதா, மரு. பரமசிவம், திருச்சி மாவட்ட காசநோய் ஒழிப்புத்துறையின் இயக்குநர் மருத்துவர் சாவித்திரி, கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியின் முதன்மையர் மருத்துவர் அர்ஷியா பேகம் மற்றும் திட்ட அலுவலர் மருத்துவர் காயத்ரி தேவி ஆகியோர் குடும்ப நலம், குடும்ப மேம்பாடு, மக்க ள் தொகை பெருக்கத்திற்கான காரணங்கள், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். இந் நிகழ்ச்சியினை துறையூர் வட்டார சுகாதார புள்ளியியலாளர் லாரன்ஸ் ஒருங்கிணைத்தார். முன்னதாக கலைக்காவேரி கல்லூ ரியின் சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.