மனிதர்களுக்கு முதுமை என்றால் பயம். நீண்ட காலம் இளமையாக இருப்பதற்கான வழிகளைக் கண்டறிய, பல காலமாக மனிதன் முயன்று வருகிறான். இளமையைத் திருப்பும் கலவையை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலை ஆய்வாளர்கள் குழு வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. டெலோமெர்ஸ் (Telomeres) என்பவை நம்முடைய குரோமோசோம்களின் முடிவில் காணப்படும் ஒருவகை பாதுகாப்பு கவசங்கள்.
இவைதான் செல்கள் பெருகுவதற்கு உதவுகின்றன. டெர்ட் (Telomerase reverse transcriptase – TERT) எனும் ஒருவகை நொதி டெலோமெர்களை மீட்டுருவாக்கம் செய்கிறது. இதை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர் விஞ்ஞானிகள்.
உடலில் இயல்பாக உள்ள ‘டெர்ட்’ நொதி உற்பத்தி, வயதாகும் போது குறைந்துவிடும். இதனால் டெலோமெர்கள் சுருங்கி, உருமாறி மரபணுக்களைச் சிதைத்து, திசுக்களின் அழிவுக்கும், புற்றுநோய்க்கும் வழி வகுக்கின்றன.
ஆகவே இந்த ‘டெர்ட்’ நொதியின் உற்பத்தியை ஊக்குவிக்கும் மருந்துக் கலவையை (TAC) எலிகளுக்குத் தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்துப் பார்த்தார்கள். இந்த எலிகளின் உடல்நிலை 75 வயதுடைய மனிதர்களுக்கு இணையானது.
இந்த மருந்தினால் முதிய எலிகளின் மூளையில் புதிய நியூரான்கள் உருவாகின; இதனால் நினைவாற்றல் அதிகரித்தது. அத்துடன் எலிகளின் வேகமும், ஆற்றலும், தசை வலிமையும் அதிகரித்தன. இந்த மருந்தை எலியின் அனைத்து உடல் பாகங்களும் உறிஞ்சிக் கொண்டன.
இதனால் புத்துணர்வு அடைந்து பழைய ஆற்றலைப் பெற்றன. அதாவது எலியின் இளமை திரும்பியது என்று கூறலாம்.
மனிதர்கள் மீது இந்த மருந்து சோதிக்கப்பட்டால் வயதாவதால் வரும் நோய்கள், குறைபாடுகளை நீக்கி இளமையை மீட்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.