ஒன்றிய அரசு விளக்கம்
புதுடில்லி, ஜூலை 11- ‘நாட்டில் போலி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களை நீக்கவே, ஆதார் அடிப்படையிலான சுயவிவரம் (கேஓய்சி) சரிபார்ப்பு பணியை அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன’ என்று ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் முன்வைத்த விமர்சனத்துக்கு அமைச்சர் புரி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகஸ்தர்களில் குறிப்பிட்ட சிலரால் போலி வாடிக்கையாளர்களின் பெயரில் வணிக சமையல் எரிவாயு உருளைகள் அடிக்கடி முன்பதிவு செய்யப்படுகின்றன.
அத்தகைய போலி வாடிக்கையாளர்களை நீக்குவதற் காக சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களின் ஆதார் அடிப்படையிலான ‘கேஓய்சி’ சரிபார்ப்புப் பணியை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்தப் பணி கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நடை பெற்று வருகிறது. வாடிக்கையாளருக்கு எரிவாயு உருளைகளைக் கொண்டு சென்று வழங்கும் டெலிவரி பணியாளர்கள், தங்கள் கைப்பேசியைப் பயன்படுத்தி கேஓய்சி நடைமுறையை மேற்கொள்கின்றனர். அதே சமயம், வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப விநியோகஸ்தர் மய்யத்தை அணுகியும் அல்லது எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரபூர்வ செயலிகளிலும் கேஓய்சி நடைமுறையை முடித்துக் கொள்ளலாம். இந்த நடவடிகைக்கு எண்ணெய் நிறுவனங்கள் அல்லது ஒன்றிய அரசு எந்த கெடுவும் நிர்ணயிக்கவில்லை’ என்றார். ஒன்றிய பெட்ரோலிய அமைச்சக தரவுகளின்படி, இந்தியாவில் 32.64 கோடி வீட்டு உபயோக சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையின்மை மன உளைச்சலில்
இளைஞர்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூலை 11- நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பொருளாதார மந்தநிலையின் தீய விளைவுகளை அய்.அய்.டி. போன்ற மிகவும் கவுரவமான கல்வி நிறுவனங்களே சந்திக்க தொடங்கி உள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டு, அய்.அய்.டி. வளாக ஆள்தேர்வில் 19 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 38 சதவீதமாக, அதாவது இருமடங்காக உயர்ந்தது.வேலையின்மையால் இளைஞர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். கல்விக்கு எதிரான பா.ஜனதாவின் மனப்பான்மையால் அவர்களின் எதிர்காலம் முடங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட
விநாயகர் சிலை மீண்டும் அதே இடத்தில்
திருவண்ணாமலை, ஜூலை 11- விநாயகர் சிலையை திருடியவர்கள் 3 ஆண்டுக்கு பிறகு கோவிலில் வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி பகுதியில் அவலூர்பேட்டைக்கு செல்லும் வழியில் உள்ள அருந்ததியர் பாளையத்தில் குளம் உள்ளது. அந்தப் பகுதியில் மாட்டுச்சந்தை அருகே சமுதாயக்கூடம் கட்டப்பட்டு அதன் அருகில் விநாயகர் சிலையை வைத்து அருந்ததிபாளையம் பகுதி மக்கள் வணங்கி வந்தனர். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு விநாயகர் சிலையை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடி எடுத்துச் சென்று விட்டனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 7.7.2024 அன்று விநாயகர் சிலையை திருடியவர்களே கொண்டு வந்து வைத்து சென்று விட்டனர். திருடிச்சென்ற விநாயகர் மீண்டும் கோவிலில் வைக்கப்பட்ட நிகழ்வை கேள்விப்பட்ட பொதுமக்கள் வியப்புடன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் விநாயகருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்து கும்பிட்டனராம்!
கடவுளாம் – திருடுகிறார்களாம் – திருப்பிக்கொண்டு வைக்கிறார்களாம் – என்னே சிறுபிள்ளை விளையாட்டு.