சென்னை மற்றும் தமிழ்நாடு உட்பட காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் ரவுடிகள் காவல்துறையின் தீவிர நடவடிக்கை!

viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை 10- பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப் பட்டாலும், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை, எனவே சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதிய காவல் ஆணையராக அருண் 8.7.2024 அன்று நியமிக்கப்பட்டார். அவர் வகித்து வந்த சட்டம் – ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் பணி, தலைமையிட கூடுதல் தலைமை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு வழங்கப்பட்டது.

முதல் கட்டமாக ரவுடிகளை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என அருண் மற்றும் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து ‘ரவுடிகளுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி தரப்படும்’ என அருண் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் ரவுடிகள் மீதான நடவ டிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அருண் பதவி ஏற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு) ஆகிய இருவருடனும் ஆலோசனை நடத்தினார்.

இதில், சென்னையில் ரவுடிகளின் பட்டி யலில் சுமார் 6 ஆயிரம் பேர் இருப்பது தெரிய வந்தது. இதில் 758 பேர் சிறையில் உள்ளனர்.

இவர்கள் தவிர மீதம் உள்ளவர்களை ரவுடிகளின் குற்றச் செயல்களுக்கு தகுந்தவாறு ஏ, ஏ பிளஸ், பி, சி என 4 வகையாக தரம் பிரித்து அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, காவல்துறையினர் ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று எச்சரித்து வருகின்றனர்.

மேலும் பருந்து செயலி மூலமும் ரவுடிகளை கண்காணிக்கின்றனர். கவனக் குறைவாக செயல்படும் காவல் நிலைய ஆய்வாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 21 ஆயிரம் பேர் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள், மண்டல காவல் துறை தலைவர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்களுக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதமும் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் ரவுடிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *