டோஸ், ஜூலை 8 இந்தியாவில் முதல் சூரிய உதயம், அருணாசலப்பிரதேச மாநிலத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில் நிகழ்கிறது. உயரமான, கரடு முரடான மலைச் சிகரங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கு, பச்சை போர்வை போர்த்தியது போல அழகானது. இந்தியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமம், இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் இடமாகும். இது சுமார் 1,240 மீட்டர் உயரத்தில் லோஹித் மற்றும் சதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 1999 ஆம் ஆண்டில், டோங் பள்ளத்தாக்குதான் நாட்டிலேயே முதன்முதலாக சூரியனின் கதிர்களைப் பெறும் இடம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் இது ‘இந்தியாவின் சூரிய உதய நிலம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த டோங் கிராமத்தில் நாட்டின் மற்ற பகுதிகளைவிட சூரியன் சீக்கிரமாக உதயமாவதால், சூரிய மறைவும் முன்னதாகவே நிகழ்கிறது. இங்கு குளிர்காலத்தில் சூரிய உதயம் காலை 5.54 மணிக்கும், சூரிய மறைவு மாலை 4.30 மணிக்கும் நிகழ்கிறது. நாட்டிலேயே முதல் சூரிய உதயத்தைக் காண 8 கி.மீ வரை மலையேறி டோங் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.
பூரி ஜெகநாதர் கருணை!
ரத யாத்திரையில் பக்தர் சாவு
பூரி, ஜூலை 8- ஒடிசா பூரி ஜெகநாதர் கோவிலில் 5.7.2024 அன்று நடந்த ரத யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். மக்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்ற தேர்களைப் பார்த்து அவர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுப்பதற்காக பக்தர்கள் சிலர் முண்டியடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக்கொண்டனர். அதில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் 5 பக்தர்கள் இந்த நிகழ்வில் காயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதைப்போல சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு மக்கள் நெரிசல் காணப்பட்டதால் மூச்சுத் திணறல் மற்றும் நீரிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.