புதுடில்லி, ஜூலை 8 மோசமான பணிச் சூழல், வரம்பற்ற வேலை நேரம் உள்பட ரயில் ஓட்டுநா்கள் எதிர்கொண்டுவரும் அவலங்களை நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி எழுப்பும் என்று மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நேற்று (7.7.2024) தெரிவித்தார்.
புதுடில்லி ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநா்களுடனான தனது சமீபத்திய சந்திப்பு குறித்த காணொலியை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து, ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ரயில் ஓட்டுநா்களின் வாழ்க்கை முழுமையாகத் தடம்புரண்டுள்ளது. வெப்பத்தால் தகிக்கும் அறைகளில் அமா்ந்து, 16 மணி நேரம் வரை பணியாற்றும் கட்டாயத்துக்கு அவா்கள் தள்ளப்படுகின்றனா். தங்களின் சொந்த வாழ்க்கை மீதே நம்பிக்கையற்ற சூழலை எதிர்கொண்டுள்ளனா்.
சிறுநீா் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில், அவா்களின் பணி நேரத்துக்கு வரம்பில்லை. விடுமுறையும் கிடைப்பதில்லை. இதனால், உடல் அளவிலும் மன தளவிலும் ரயில் ஓட்டுநா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுபோன்ற சூழலில் பணி யாற்றுவது, அவா்களின் உயிருக்கு மட்டுமன்றி அவா்களைச் சார்ந்தி ருக்கும் பயணிகளின் உயிருக்கும் ஆபத்தானதாகும். எனவே, ரயில் ஓட்டுநா்களின் பணிச் சூழல் மேம்பாடு மற்றும் அவா்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி குரல் எழுப்பும் என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா், வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, புதுடில்லி ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநா்கள் 50 பேரை அவா் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, தாங்கள் எதிர்கொண்டுள்ள தீவிரமான பிரச்சினைகள் குறித்து ராகுலிடம் ரயில் ஓட்டுநா்கள் புகார் தெரிவித்தனா். ஆள்பற்றாக்குறையால் போதிய ஓய்வு கிடைப்பதில்லை; மனிதாபிமானமற்ற சூழலில் பணியாற்றுகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா். தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை யும் அளித்தனா்.