புதுடில்லி, ஆக. 22- அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளில் பிஏ.2.86 (பிரோலா) என்ற புதிய வகை கரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல 50-க்கு மேற்பட்ட நாடுகளில் இஜி.5 (எரிஸ்) என்ற மற்றொரு வகை கரோனாவும் பரவுவது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கரோனா தொடர்பாக ஒன்றிய அரசு நேற்று (21.8.2023) உயர்மட்ட ஆலோசனை நடத்தியது. இதில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா, சுகாதார செயலாளர் சுதான்ஷ் பந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய வகை கரோனா குறித்த விவரங்கள் பகிரப்பட்டன. அத்துடன் நாட்டின் தற்போதைய பரவல் நிலவரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், புதிய வகை கரோனாவை கண்டறியும் வகையில், கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு மரபணு பரிசோதனையை தீவிரப்படுத்த மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.