அகமதாபாத் ஜூலை 7- அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 266 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை திரும்ப எடுத்து கொள் வதற்கு சம்மதம் தெரிவித்து குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட் டத்தில், முந்த்ரா துறைமுகம் உள்ளது. நாட்டின் முதலாவது தனியார் துறைமுகமான முந்த்ரா துறை முகத்தை அதானி நிறுவனம் நடத்தி வருகிறது.
கடந்த 2005இல் துறைமுகம் அருகே உள்ள நவினால் கிராமத்தில் 266 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடி தலைமையிலான மாநில அரசு அதானிக்கு வழங்கியது.
இது கால்நடை மேய்ச்சலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த புறம்போக்கு நிலம் 2005இல் வழங்கப்பட்ட போதிலும் 2010இல் அதானி நிறுவனம் நிலத்தை சுற்றி வேலி அமைத்த போதுதான் அது பற்றி கிராம மக்களுக்கு தெரிய வந்தது.
பல்வேறு பகுதிகளை சேர்ந்த வர்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதால் 45 ஏக்கர் இடத்தில் கால்நடைகளை மேய்ப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.அரசின் முடிவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் கிராம மக்கள் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர்.
மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்த நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியது சட்ட விரோதம். இதனால் கால்நடைகளுக்கான தீனி உள்ளிட்டவற்றில் கடும் பற்றாக்குறை ஏற்படுவதாக தெரிவித்திருந்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், கால்நடைகள் மேய்ச்சலுக்கு கூடுதலாக நிலங்களை ஒதுக்குவதற்கு மாவட்ட துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தது.
இதனால் மனுவை நீதிமன்றம் தள்ளபடி செய்தது. ஆனால் நிலம் ஒதுக்காததால், கிராமத்தினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். 2015இல் மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது. அதில், பஞ்சாயத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் 17 எக்டேர் மட்டுமே என்று தெரிவித்தது.
மேலும், கால்நடைகளின் மேய்ச்சலுக்கு 7 கி.மீ.க்கு அப்பால் நிலம் ஒதுக்குவதாக அரசு தெரிவித் தது. இவ்வளவு துாரத்துக்கு கால் நடைகளை கொண்டு செல்வது சாத்தியம் இல்லை என்று கிராமத் தினர் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால்,நீதிபதி பிரணவ் திரிவேதி அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணுமாறு கூடுதல் தலைமை செயலாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், 5.7.2024 அன்று அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 266 ஏக்கர் நிலத்தை திருப்பி எடுத்து கொள்ள அரசு முடிவு செய்துள்ளது என்றும் அந்த நிலம் கிராம மக்களின் பயன் பாட்டுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். 13 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.