சென்னை, ஜூலை 7- இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டு சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்து கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையிலிருந்து வந்தாலும் அவற்றில் பலமுறை தேவையான திருத்தங்களை செய்துகொண்டே வந்திருக்கிறோம். எதிர்காலத்தில் தேவைப்படும் திருத்தங்களையும் நாம் செய்துகொள்ள இயலும் .
இந்நிலையில், ஒன்றிய அரசு நடப்பிலிருந்த மூன்று குற்றவியல் சட்டங்களை நீக்கி விட்டு அதற்கு மாற்றாக பாரதிய நியாய சன் ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய அதிநியா என்ற புதிய மூன்று குற்ற வியல் சட்டங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்திருந்த நேரத் தில் எவ்வித விவாதமுமின்றி இயற்றி 2024 ஜூலை 1 முதல் அமல்படுத்தி யுள்ளதற்கு தமுஎகச கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அனைத்துச் சட்டங்களும் ஆங்கிலத்தில்தான் இயற்றப்பட வேண்டும் என்ற அரசமைப்புச்சட்ட விதிக்கு எதிராக இச்சட்டங்களின் தலைப்புகள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் சூட்டப்பட் டுள்ளது முற்றிலும் பாரபட்சமானது, தேசத்தின் மொழிப்பன்மைக்கும் மாநில மொழியுரிமைக்கும் எதிரானது.
முந்தையச் சட்டத்தில் நீக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் பலமுறை எச்சரித்துள்ள தேசதுரோகம் குற்றப்பிரிவு வேறு வார்த்தைகளில் அதைவிடக் கடுமையானதாக புதிய தண்டனைச்சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் தவறாக பயன்படுத்தப்படும் பொடா, ஊபா சட்டங்களில் உள்ள கடுமையான பிரிவுகள் இந்தப் புதிய தண்டனைச் சட்டத் தில், சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் மக்கள் தமது எதிர்ப்பை ஜனநாயகப்பூர்வமாக வெளிப்படுத்துவதற்குரிய அடிப்படை உரிமையினை ஒடுக்கும் வகையில் பட்டினிப் போராட்டம் எனும் அறவழிப் போராட்டம் கூட சிறைத்தண்டனைக்குரிய குற்றம் என இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.
நீதிமன்றக் காவலுக்கு 14 நாட்கள், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு 90 நாட் கள் என்ற காலவரம்புகள் நீக்கப்பட்டி ருப்பது வழக்காடிகளின் உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்ல, காவல்துறையின் அத்து மீறல்களை சட்டபூர்வமாக்கும் வெளிப் படையான முயற்சியுமாகும்.
மூன்று சட்டங்களும் நீதித் துறையின் அதிகாரங்களைக் குறைத்து காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை (executive magistrate) முதலியவற்றுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளதன் மூலம், சட்டத்தின் ஆட்சியைக் காவல் துறையின் ஆட்சியாக மாற்றி விடும் அபாயம் உள்ளது.
அரிதாக நடக்கும் மதம் கடந்த திருமணங்களை ‘லவ் ஜிகாத்’ என சங் பரிவாரத்தினர் மிகைப்படுத்தி பீதியூட்டிவரும் நிலையில், இந்தப் புதிய சட்டங்களின்படி அத்தகைய திருமணம் குற்றம் என சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஹிந்துத்துவா நிகழ்ச்சி நிரலையும் சிறுபான்மை மீதான வெறுப்பையும் சட்டவழியில் செயல்படுத்துவதும் இந்தப் புதிய சட்டங்களின் நோக்கமாக இருப்பது அம்பலமாகியுள்ளது.
கருணை மனு, தண்டனையை நிறுத்திவைத்தல், மாற்றம் செய்தல் உள்ளிட்ட மாநில அரசிடமிருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை போராடிப் பெற்றுவந்த மொழியுரிமை, மாநில உரிமை, வழக்காடும் உரிமை, மனித உரிமைகள் என அனைத்து நிலையிலும் மேற்படி புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிராக அமைந்துள்ளதால் ஒன்றிய அரசு அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமுஎகச வலியுறுத்துகிறது.