குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு முக்கியம் நெய்வேலியில் 23ஆவது புத்தக கண்காட்சி தொடங்கியது

viduthalai
1 Min Read

கடலூர், ஜூலை 7- நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 23ஆவது புத்தகக் கண்காட்சியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் துவக்கி வைத்து புத்தகக் கண்காட்சி அரங்கை பார்வையிட்டனர். என்எல்சி இயக்குநர்கள் உடனிருந்தனர்.

புத்தகக் கண்காட்சி செயலாளர் செயல் இயக்குநர் ஹேமந்த் குமார் வரவேற்றார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புரான், என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப் பள்ளி மற்றும் இயக்குநர்கள் விழாவை தொடங்கி வைத்தனர்.

தினம் ஒரு எழுத்தாளர் பாராட்டப்படும் வரிசையில் முதல் நாள் என்.செல்வத்தை பாராட்டி பரிசுத் தொகை வழங்கினர். அதேபோல், பாராட்டப்படும் பதிப்பகத்தார் கோரல் பப்ளிஷர்ஸ் நிறுவன உரிமையாளர் ஜி.துரைராஜை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

இவ்விழாவில் நெய்வேலி என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், புத்தகங்கள் மிகச்சிறந்த ஆளுமையாளர்களுடன் நம்மை உரையாடச் செய்திடும் வல்லமை பெற்றவை. அறிவை வழங்குவதில் இந்தியா ஒரு முன்னோடி நாடாக திகழ்கிறது. அதற்கு நாளந்தா பல்கலைக்கழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு முக்கியம். இப்போதைய புத்தக வாசிப்பாளர்கள் தான் நாளைய தலைவர்கள் எனக் கூறினார்.

ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் பேசுகையில், கடந்த ஆண்டு கடலூரில் என்எல்சி நிறுவனத்தின் ஆதரவுடன் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. 23-ஆவது புத்தகக் கண்காட்சியை என்எல்சி நிறுவனம் சிறப்பாக செய்துள்ளது.

அனைவரும் தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் தங்கள் அறிவை மேம்படுத்தும், மிகச் சிறந்த கல்வியைப் பெறவும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றார். விழாவில், என்.எல்.சி., இயக்குநர்கள், அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *