சென்னை, ஜூலை 6- குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (குரூப் 1) அடங்கிய பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வருகிற 13ஆம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது.
இத்தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (ஹால் டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் தளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு
தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள்
சென்னை, ஜூலை 6- தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, ஏறத்தாழ 6.50 லட்சம் கோடிக்கு அதிகமாக கடன் சுமையோடு ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது. ஆனாலும் திறமையாலும், கடும் உழைப்பாலும் எண்ணற்ற அரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
10 ஆண்டு காலம் முடங்கி கிடந்த 18 நல வாரியங்கள் மீண்டும் சீரமைக்கப்பட்டு, வாரியத்தின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் இரட்டிப்பாக ஆக்கப்பட்டுள்ளன. கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள ₹4 லட்சம் இலவச நிதி, 3 ஆண்டு காலத்தில் 21 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹1646 கோடியில் நலத்திட்ட உதவிகள், 3 ஆண்டுகளில் புதிதாக 16.6 லட்சம் தொழிலாளர்கள் பதிவு என பிற மாநிலங்கள் தமிழ்நாட்டை பின்பற்றக்கூடிய அளவிற்கு அரிய திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார்.
விக்கிரவாண்டியில் திமுகவுக்கு வெற்றி அளிப்பதன் மூலம் முதல்வரின் ஆக்கப்பூர்வமான பணிக்கு மேலும் ஒரு அங்கீகாரம் வழங்க முடியும். இதற்காக விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டு திமுகவை வெற்றி பெற வைப்போம்.