லண்டன், ஜூலை 6 இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் முன்எப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பதவி விலகிய இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷிசுனக், ரிச்மண்ட் மற்றும் நார்தலர்டன் தொகுதியில் வெற்றி பெற்றார். ரிஷிசுனக் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த இன்னொரு இந்திய வம்சாவளி கோவாவை சேர்ந்த கிளாரி கவுடின்ஹோவும் வெற்றி பெற்றார். அதே போல் மேனாள் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் மற்றும் பிரிதி படேல் ஆகியோரும் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்றனர். ககன் மொகிந்திரா தனது தென்மேற்கு ஹெர்ட்போர்ட்ஷையர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதே போல் ஷிவானி ராஜா என்பவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி வேட்பாளரான ராஜேஷ் அகர்வாலை எதிர்த்து லெய்செஸ்டர் ஈஸ்ட் தொகுதியில் வெற்றி பெற்றார். அதே சமயம் கன்சர்வேட்டிவ் கட்சியில் வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷையர் தொகுதியில் போட்டியிட்ட ஷைலேஷ் வாரா மற்றும் அமீத் ஜோகி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
தொழிற்கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் வெற்றி பெற்றனர். சீமா மல்ஹோத்ரா என்பவர் பெல்தாம் மற்றும் ஹெஸ்டன் தொகுதியிலும், கோவாவை சேர்ந்த கீத்வாசின் சகோதரி வலேரி வாஸ் என்பவர் வால்சால் மற்றும் ப்ளாக்ஸ்விச் தொகுதியிலும், விகான் தொகுதியில் லிசா நந்தியும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரீத் கவுர் கில் தனது தொகுதியான பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனிலும், தன்மன்ஜீத் சிங் தேசி என்பவர் ஸ்லோ தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
நாவேந்து மிஸ்ரா (ஸ்டாக்போர்ட்), நதியா விட்டோம் (நாட்டிங்ஹாம் கிழக்கு) ஆகியோர் அதிக வாக்குவித்தியாசத்தில் வென்றனர். ஜாஸ் அத்வால் (இல்போர்ட் சவுத்), பேக்கி ஷங்கர் (டெர்பி சவுத்), சத்வீர் கவுர் (சவுத்தாம்ப்டன் டெஸ்ட்), ஹர்ப்ரீத் உப்பல் (ஹடர்ஸ்பீல்ட்), வாரிந்தர் ஜஸ் (வால்வர்ஹாம்ப்டன் வெஸ்ட்), குரிந்தர் ஜோசன் (ஸ்மெத்விக்), கனிஷ்க நாராயண் (வேல் ஆப் கிளாமோர்கன்), சோனியா குமார் (டட்லி), சுரீனா பிராக்கன்பிரிட்ஜ் (வால்வர்ஹாம்ப்டன் நார்த் ஈஸ்ட்), கிரித் என்ட்விசில் (போல்டன் நார்த் ஈஸ்ட்), ஜீவுன் சாந்தர் (லபரோ), சோஜன் ஜோசப் (ஆஷ்போர்ட்) ஆகியோரும் வெற்றி பெற்றனர். அதே போல் லிபரல் டெமாக்ராட்ஸ் கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த முனிரா வில்சன் தனது ட்விகன்ஹாம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.