“மனுஸ்மிருதி”யின் பிடியில் அதிகார வர்க்கம் கனவுகளுடனே ஓய்வுறும் மண்ணின் மைந்தர்கள்!

viduthalai
9 Min Read

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணம், இந்தியாவின் நீதிகான பயணம் – இது இரண்டுமே பல்வேறு சிக்கல்களை மய்யமாக வைத்து மக்களை விழிப்புணர்வு அடையவைக்க எடுத்துக்கொண்ட நடைப்பயணம் ஆகும்.
ஆனால் இதில் மிகவும் முக்கியமானதில் மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்கும் உரிமைகளை தட்டிப்பறிக்கும் உயர்ஜாதி வர்க்கத்தின் அடக்குமுறையும் ஒன்று.

ஞாயிறு மலர்

ராகுல்காந்தி போன்ற தலைவர்கள் இந்தக் கோணத் தில் அணுகுவது இம்மண்ணின் மைந்தர்களுக்கு பாலை வனத்தில் கள்ளிப் பழங்களை உண்டு வறட்சியில் வாழும் மக்களுக்கு தர்பூசணிப்பழம் கொடுத்து உபசரிப்பது போன்றதாகும்.
ஆம். மூன்று இடங்களில் அவர் கூறியது போன்று, உத்தரப்பிரதேசம், மகாராட்டிரா, மற்றும் ராஜஸ்தான் இந்த மூன்று மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அதிக இடங்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ராகுல், இங்கே எத்தனை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங் குடியினர் ஊடகவியலாளர்களாக உள்ளனர் என்று கேட்டார். சுமார் 200க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் குழுமி இருந்த அந்த இடத்தில் ஒருவர் கூட கைதூக்கவில்லை.

ஒரே ஒரு காமிராமேன் தூரத்தில் இருந்து கைதூக்கினார். பிறகுதான் தெரிந்தது அவர் சிறுபான்மையினத்தவர் – அதுவும் தினக்கூலி அடிப்படையில் வாடகைக்கு காமிராவாங்கி ஒளிப்பதிவு செய்பவர் எனபிறகுதான் தெரியவந்தது.
சுமார் 93 விழுக்காடு இருக்கும் மக்கள் தொகையினருக்கு அவர்களுக்காக செயல்படுகிறோம் என்று கூறிக்கொள்ளும் ஊடகத் துறையில் அந்த மக்களில் ஒருவர் கூட பிரதிநிதியாக இல்லை என்பது எவ்வளவு கொடுமை.

சமீபத்தில் நேர்காணலில் மராட்டிய ஹிந்தி முன்னணி நடிகர் நானாபடேகரை லல்லண்டோப் என்ற இணைய இதழுக்காகப் பேட்டி கண்ட பிரபல ஊடகவியலாளர் சுமார் 50 க்கும் மேற்பட்ட தனது குழுவினரை அழைத்து அவருக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது நானா படேகர் இதில் யாருமே சிறுபான்மையினர் இல்லையா என்று கேட்டார். இங்கும் ஒரே ஒரு காமிரா மேன் மட்டும் தூரத்தில் இருந்து கையைத் தூக்கினார்.

அதன் பிறகு அவர் யாராவது எஸ்.சி., எஸ்.டி. ஓபிசி என்று கேட்க மயான அமைதி. அவரோ உடனடியாக சூழலை மாற்றி கலகலப்பாகிவிட்டார்.

மேலே கூறிய இரண்டு நிகழ்வுகளுமே இந்த மண்ணின் மைந்தர்கள் எந்த அளவிற்கு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் உரிமைகள் இன்றி வாழ்கிறார்கள் என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டுகளாகும்.

சமீபத்தில் அதுவும் குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உயர்பதவிகளில் குறிப்பிட்ட சமூகத்தவரே அமர வைக்கப் படுகின்றனர். அமரவைக்கப்பட்ட பிறகு அவர்களது பதவிக்காலம் முடியும் போது தொடர்ந்து புதிய புதிய பதவிகளை உருவாக்கி மீண்டும் அவர்களே மோடி அண்ட் கம்பெனியால் அதே பதவிகளில் அமர வைக்கப்படுகிறார்கள்.

அதுவும் மோடி மீண்டும் பிரதமர் ஆன பிறகு இந்த நியமனங்கள் வேகமெடுத்து வருகிறது. ஊடகங்கள் இது குறித்து வாயைக்கூட திறப்பதில்லை. எதிர்க் கட்சியினர் இந்த ஆட்சி உருவாக்கி இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் போது – பெரும்பாலான அதிகாரிகளின் உரிமைகளை பறிக்கும் குறிப்பிட்ட சமூகத்தவர்களின் நியமனங்கள் குறித்து பேச இயலாமல் போய்விடுகிறது – ஆகையால் நாம் பேசுவோம்.

இது சர்வாதிகார ஆட்சி என்று நினைத்துக்கொண்டு இருக்கும் வேளையில் இது பார்ப்பன அதிகாரிகளின் ஆட்சி என்று ஆகிவிட்டது. அதிகாரிகளுக்கு மீண்டும் மீண்டும் சேவை நீட்டிப்பு அளிக்கப்படும் விதம் எல்லையைத் தாண்டிவிட்டது.

சேவையை விட விரிவாக்கம் என்பது ,மோடி அரசுக்கு இந்த அதிகாரிகள் ஏதோ ஒன்றுக்கு தேவை – அதனால் அதற்கான வெகுமதி ஆகும். அந்த ஏதோ என்பது மண்ணின் மைந்தர்களின் எதிர்கால வளர்ச்சி குறித்தான திட்டங்களுக்கானது இல்லை என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

இப்படி குறிப்பிட்ட நபர்களுக்கே சேவை நீடிப்பு செய்வதால் இந்த நாட்டில் திறமை இல்லாத அதிகாரிகளே இல்லையோ என்ற ஒரு அய்யம் அனைவரிடையேயும் எழுவதும் இயல்பானதே.

2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும் போது என்ன கூறினார். “சப்கே சாத் சப்கா விகாஸ்” (அனைவரையும் சேர்த்து அனைவருக்குமான வளர்ச்சி). ஆனால், இங்கே என்ன நடக்கிறது – குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே – அவர்களின் மூதாதையர் இந்த மண்ணிற்கு சொந்தமானவர்கள் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

பிரதமர் அலுவலக செயலகம், அமைச்சரவைச் செயலகம், முதன்மைச் செயலாளர்கள் என அத்தனை மிக உயர் பதவிகளும் குறிப்பிட்ட வர்க்கத்திற்கே வழங்கப்படுவது கடந்த 10 ஆண்டுகளில் வாடிக்கையாகிவிட்டது. அதாவது இது ஒரு கொள்கையாகவே மாறிவிட்டது.

முதலில் குஜராத்திற்கு வருவோம்
கைலாஷ் நாத்

மோடி முதலமைச்சராக இருந்த போது முதலமைச்சரின் தனி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். பின்னர் தலைமைச் செயலாளர் அதிகாரம் கொண்ட பதவி – மோடி டில்லிக்கு சென்ற பிறகும் அடுத்த – அடுத்த குஜராத் முதலமைச்சர்களைக் கட்டுக்குள் வைக்கும் பதவி – 73 வயது முடியப் போகிறது. இருப்பினும் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கிக்கொண்டே இருக்கின்றனர்.

ஒரே ஒரு அதிகாரியே மாநிலத்தின் அத்தனை அதிகாரங்களும் கொண்ட பதவியில் 20 ஆண்டிற்கும் மேலாக இருக்கிறார். அவருக்கு கீழே திறமையுள்ள எத்தனையோ அதிகாரிகள் பதவி உயர்வு பெறாமலேயே பணி நிறைவு பெற்றிருப்பார்கள். அந்த அதிகாரிகளின் திறமைகள் அத்தனையும் மண்ணாகிப் போய்விட்டது.

எத்தனையோ திறமையான அதிகாரிகள் வந்திருக்கலாம் – ஆனால் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக இருந்ததால் கைலாச நாத்-க்கு கிடைத்த முக்கியத்துவம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

உத்தரப்பிரதேசத்திற்கு வருவோம்

மாநிலத்தில் தலைமைச் செயலாளராக மனோஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சாமியார் முதலமைச்சரின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரே ஒரு அதிகாரி என்று உத்தரப்பிரதேச தலைமைச் செயலகத்தில் பேசப்படுகிறது.

இவரும் நீண்ட ஆண்டுகளாக உத்தரப்பிரதேச அதிகார மய்யத்தின் தலைமையில் அமர்ந்துகொண்டு இருக்கிறார். ஏற்கெனவே இங்கு இருந்த துர்கா சங்கர் மிஸ்ரா டிசம்பரில் ஓய்வு பெறவேண்டும் – அதாவது இவர் கடந்த டிசம்பரில் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக டில்லிக்கு அழைக்கப்பட்டு மோடியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைச்சரவை செயலாளராக ஆக்கப்பட்டு டில்லியில் இருந்து உ.பி.க்கு அனுப்பப்பட்டார்.
இந்த நடைமுறையால் வரிசையில் இருக்கும் எட்டு உயரதிகாரிகளுக்கு பதவி உயர்வுகிடைக்காமல் போய்விட்டது. அதாவது அவர்கள் வாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டது.

அதே போல் ஒட்டுமொத்த உத்தரப்பிரதேசத்தின் அதிகாரத்தையும் கைக்குள் வைத்திருக்கும் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மகேஷ் குமார் குப்தா மற்றும் ராதா சவுகான், அனிதா சிங், சுதிர் கர்க், கல்பனா அவஸ்தி, அமித் மோகன் பிரசாத் மற்றும் ஹேமந்த் ராவ் போன்றவர்களை தேர்தல் ஆணையம் கூட 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இடமாற்றம் செய்யாதது மிகவும் வியப்பை அளிக்கிறது.

ஞாயிறு மலர்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேர்தல் நடைமுறையைக் காரணம் காட்டி அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பந்தாடியதை நாம் கண்டோம்.

குறிப்பாக மேற்குவங்க டிஜிபி, தலைமைச் செயலாளர் போன்றோர் பந்தாடப்பட்டனர். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் ஆணையம் யாரையுமே நீக்கவில்லை. தற்போது தலைமைச்செயலாளர் பதவியில் இருக்கும் மனோஜ் குமார் பதவி ஓய்வு பெற சில நாட்கள் இருக்கும் போதே அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டது மிகவும் வியப்பான ஒன்றாக உள்ளது. ஏன் இவர்கள் மட்டுமே அங்கு இருக்கவேண்டும் என்பது நமக்குள் ஏற்படும் பெரும் கேள்வி ஆகும்.

உங்களுக்குத் தெரியும் – அமலாக்கத்துறை தலைவர் பதவியில் தொடர்ந்து சஞ்சய் குமார் மிஸ்ரா இருந்தார் – அவருக்கு ஒன்றிய அரசு பதவி நீடிப்பு வழங்கிகொண்டே இருந்தது, உச்சநீதிமன்றமே ஒன்றிய அரசைக் கண்டித்தது.
அவரைத் தவிரவேறு யாருமே திறமைசாலி இல்லையா என்று கேட்டது. இருப்பினும் அவரை தலைவராகவே மோடி அரசு நீடிக்கவைத்துள்ளது.

அதாவது இவரது பதவி நீடிப்பிற்காகவே அமைச் சரவையைக் கூட்டி அரசாணை வெளியிடுகிறது – அதே போல் சிபிஅய் தலைவர் – அவருக்காக விதியையே மாற்றுகிறது.

தேர்தல் பத்திர முறைகேட்டில் முக்கிய தகவலை வெளியிடமாட்டேன் என்று நீதிமன்றத்தில் கூறிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சேர்மேன் தினேஷ் குமார் காரா, அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஷ்வினி திவாரி ஆகியோரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2024 ஜூன் 4 ஆம் தேதி மோடி பதவி ஏற்ற பிறகு தொடர்ந்து பழைய அதிகாரிகளுக்கு மீண்டும் பதவி நீடிப்பு கொடுத்தும் புதிய புதிய பதவிகளை உருவாக்கியும் தொடர்ந்து அவர்களை ஆணி அடித்தாற்போல் அதே இருக்கைகளிலேயே அமர வைத்துள்ளார்.

சிலரைப் பார்க்கலாம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோபாலுக்கு பணி நீடிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பதவிக்கு சில வரைமுறைகள் விதிகள் உண்டு, அந்த விதியைப் பயன்படுத்தி மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஜே.என்.தீட்சித் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் பாதுகாப்பு ஆலோசகர் ஆனார்கள்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு அனுபவம் தேவைதான். அதற்காக 80 வயதை நெருங்கிக்கொண்டு இருக்கும் ஒருவரை அப்பதவியில் தொடர்ந்து வைத்திருப்பது எவ்வகையில் நீதி என்று மனதிற்குள்ளேயே பாதுகாப்புத்துறையில் பதவி உயர்வை எதிர்பார்த்து இருக்கும் உயரதிகாரிகள் குமுறுகின்றனர்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ராவுக்கு பல ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அஜித் தோபால் மற்றும் பி.கே.மிஸ்ரா இருவருக்குமே வயது 80அய் நெருங்கிவிட்டது.
ரவி அகர்வால் CBDTயின் தலைவராக பதவி நீட்டிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு விவாதங்களில் சிக்கி நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான மேனாள் சிபிஅய் தலைவருக்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு கண்காணிப்பு உறுப்பினராக பதவி வழங்கப்பட்டுள்ளது. இது அமைச்சரக செயலாளர்களுக்கு நிகரான பதவி ஆகும்.

நிருபேந்திர மிஸ்ரா – 5 ஆண்டுகள் பிரதமர் அலுவலக நேரடி செயலாளாராக இருந்த இவர் அங்கிருந்து ராமன் கோவில் கட்டுமானக் குழு தலைவராகிறார். சரியாக தேர்தலுக்கு முன்பு இந்தப் பணியை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டே இவரை ராமன் கோவில் கட்டுமான குழுத் தலைவராக நியமித்ததாக சாமியார் ஆதித்யநாத் தரப்பிலேயே பேசப்பட்டது.

மிஸ்ராவின் மகனுக்கு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வி அடைந்தார். இன்று அயோத்தி நகர நிர்வாக முறைகேடு, கோவில் பணிகளில் ஊழல் என்று அந்த கோவில் தலைமைச்சாமியாரே கூறும் அவலம்.

தேசிய புதிய கல்விக்கொள்கை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அத்தோடு சமூக வலைதளக் கட்டுப்பாடுகளில் விதிகளைக் கொண்டுவந்த பிரதமரின் தனி ஆலோசகர்களான அமித் கரே மற்றும் தருண் கபூர் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமித் காரே கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்கல்வித் துறை செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவர் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகராக நியமிக்கப் பட்டார்.
64 வயது ராஜீவ் கவுபா வாஜ்பாய் காலத்தில் இருந்தே அமைச்சரவை ஆலோசகராக தொடர்கிறார். தற்போதும் அவர் பிரின்சிபல் கேபினெட் செகரட்டரியாகவே உள்ளார்.

உள்துறை செயலாளராக பதவியில் இருக்கும் அஜய் பல்லாவை 2020, 2021, 2022, 2023 மற்றும் தற்போது வரை தொடர்ந்து பதவி நீடிப்பு வழங்கி ஒரே இடத்தில் அமரவைத்துள்ளது இந்த மோடி அரசு. உளவுத்துறை தலைவர் தபன் குமார் தோகாவின் பதவிக்காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

நன்றாக கவனிக்கவேண்டியது சுமார் 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல் இதில் உள்ளது. இவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதியினர். ராகுல் கூறியது போல் இதில் யாருமே மண்ணின் மைந்தர்கள் கிடையாது. திறமைசாலிகளுக்கு பதவி உயர்வோ பதவி நீடிப்போ வழங்கலாம்தான். அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.
அதே நேரத்தில் குறிப்பிட்ட மேல்தட்டு அதிகாரிகளுக்கு மட்டுமே திறமை உள்ளதா? சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் இருக்கும் இவர்களால் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் எத்தனை அதிகாரிகளுக்கு சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை யார் தான் எடுத்துக் கூறுவார்கள்.

இந்த 10 ஆண்டுகளில் சாமானியர்களின் உரிமைகள் கிட்டத்தட்ட முழுமையாக பறிக்கப்பட்டதன் பின்னணியில் பார்ப்பனிய அதிகார வர்க்கம் திறமையாக செயல்பட்டு இருக்கிறது, நமக்கே தெரியாமல் நாம் கடந்த நூற்றாண்டிற்கே திரும்பி விட்டோமா என்று அய்யம் கொள்ளத் தோன்றுகிறது.

காரணம் அன்றும் இதே போல் தான் பிரிட்டிஸ் இந்தியாவின் ஆட்சி இருந்தாலும் அனைத்துத் துறைகளிலும் மேல் மட்டத்தில் பார்ப்பனர்களும் உயர்ஜாதியினருமே அமர்ந்திருந்தனர் என்பது புள்ளிவிபரங்களோடு நூல்களாவே வெளிவந்துள்ளது. மீண்டும் காலச்சக்கரம் பின்னோக்கிச் சென்றுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *