தென்காசி, ஜூலை 4- குற்றாலத்தில் 45 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது.
முதல் வகுப்பை கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும், இரண்டாம் வகுப்பை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் நடத்தினர்.
1978 ஆம் ஆண்டு தொடங்கிய குற்றாலம் பயிற்சி முகாம் 45 ஆம் ஆண்டாக 2024 இல் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள திருமண மண்டபத்தில் 4.7.2024 அன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், “பெரியார் ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் முதல் வகுப்பையும், இரண்டாம் வகுப்பை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், “நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம்” எனும் தலைப்பிலும் நடத்தினர்.
தொடக்கத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு பழனிவேல் புரட்சிக் கவிஞரின் பாடலான “நூலைப் படி” பாடலை ராகத்துடன் மாணவர்கள் முன்னிலையில் பாடிக் காட்டினார். கழகக் காப்பாளர் டேவிட் செல்லத்துரை அவர்களின் தலைமையில், தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த. வீரன் அனைவரையும் வரவேற்றார்.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் பொறுப்பாளரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான தஞ்சை இரா. ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறையின் வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி, வகுப்பில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை விளக்கினார். பயிற்சி அரங்குக்கு சரியாக காலை 11 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் வருகை தந்தார். அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அவருக்கு கரவொலி செய்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அவருக்கு கழகக் காப்பாளர் பால் ராசேந்திரம் பயனடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன் தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதி, துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பேராசிரியர் ப. காளிமுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், பகுத்தறிவாளர் கழக ஊடகத்துறை மாநிலத் தலைவர் மா. அழகிரிசாமி, கழகக் காப்பாளர் பால் ராசேந்திரம், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக பொன்முடி, மாணவர் கழக மாநிலச் செயலாளர் செந்தூர பாண்டியன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கே. டி. சி. குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். வகுப்புக்கு 78 மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.
ஆசிரியர், தனது வகுப்பு முதலில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் உங்களை சந்திப்பதில் பெருமை கொள்கிறேன் என்று தொடங்கினார். நாம் பிறக்கும் போது சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கத்தை காண முடியவில்லை என்றாலும், அதன் நூற்றாண்டு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது பெருமைக்குரியது என்றார். தொடர்ந்து சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளை வரிசைப்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். சுயமரியாதை என்ற சொல்லையே பெரியார் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று அதன் பின்னணியையும் விளக்கினார். நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படி இருந்தது என்பதை படம் பிடித்துக் காட்டினார். ஜாதி பேதத்தை களைந்து சமத்துவத்தை பெரியார் எப்படி நிலைநாட்டினார் என்பதையும் மாணவர்களுக்கு புரிய வைத்தார். சுயமரியாதை இயக்கத்தால் ஆண், பெண் பேதம் எப்படி ஒழிக்கப்பட்டது என்பதையும் கோடிட்டு காட்டினார். எல்லா பேதத்தையும் ஒழித்துக் கட்டுவது தான் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் என்பதை சுருங்கச் சொல்லி விளக்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பா ளர்கள் புதிய மாணவர்களை உட னழைத்து வந்து பதிவு செய்ய வைத்து, வகுப்பில் அமர வைத்துக் கொண்டிருந்தனர். ம.தி.மு.க. வைச் சேர்ந்த அருணகிரி, திமுகவைச் சேர்ந்த இரா. பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடங்களை செவிமடுத்தனர்.