சென்னை, ஜூலை 4- உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என அண்ணா பல்கலைக்கழகத்தின் 44ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஏ.அய்.சி.டி.இ. தலைவர் சீதாராம் பாராட்டி பேசினார்.
பட்டமளிப்பு விழா
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44ஆவது பட்டமளிப்பு விழா, கிண்டி பல் கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானத்தர் அரங்கில் 2.7.2024 அன்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
இதில் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பதிவாளர் பிரகாஷ், தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் சக்திவேல் உள்பட பல்கலைக்கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் 66 பேருக்கு தங் கப் பதக்கமும், 932 பேருக்கு ஆராய்ச்சி பட்டமும் என மொத்தம் 998பேருக்கு நேரடியாக பதக்கமும், சான்றிதழுடன் கூடிய பட்டங்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
1,14,957 பேருக்கு பட்டங்கள்…
இதுதவிர சிவில், மெக்கானிக் கல், எலக்ட்ரிக்கல், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், கட்டடக் கலை மற்றும் திட்டம், அறிவியல் மற்றும் மனிதநேயம், மேலாண்மை அறிவியல் ஆகிய பொறியியல் சார்ந்த இளநிலை படிப்புகளை முடித்த 94 ஆயிரத்து 699 பேருக்கும், முதுநிலை படிப்பு களை நிறைவு செய்த 19 ஆயிரத்து 325 பேருக்கும்,எம்.எஸ். முடித்த ஒருவருக்கும் என மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 959 பேர் கல்லூரி வாயிலாகவும் என மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 957 பேருக்கு நேற்று (2.7.2024) பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.அய்.சி.டி.இ.) தலைவர் டி. ஜி.சீதாராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-
உலகளாவிய அளவில், ஒவ் வொரு ஆண்டும் 26.5 கோடி மாணவர் சேர்க்கை பள்ளிகளிலும், 4.3 கோடி மாணவர் சேர்க்கை உயர் கல்வி நிறுவனங்களிலும் உள்ள சூழலில், இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர் எண்ணிக்கை 28.3கோடியாக இருப்பது பெருமைக்குரியது.
தேசிய கல்விக்கொள்கை-2020இல் இந்தியாவில் உயர்கல்வியில் ஒட்டு மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 50 சதவீதம் என்ற நிலையை 2030ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற நோக்கில் பயணிக்கிறோம். ஆனால் தமிழ்நாடு கடந்த 2022-2023ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் 47 சதவீதத்தையும், 2023-24ஆம் ஆண்டில் 50 சதவீதத்தையும் எட்டியுள்ளது. 2025ஆம் ஆண் டில் இன்னும் அதிகரிக்கும். அந்த வகையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை சதவீதத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
போட்டி நிறைந்தது
தொழில்நுட்பக் கல்வித் துறை, உலகளாவிய அளவில் போட்டி நிறைந்ததாகவே இருக்கிறது. இந்தியர்கள், இந்திய படிப்புகள் இல்லாத ஒரு நிறுவனத்தைக்கூட இப்போது காண முடியாது. பொறியியல் கல்லூரிகள் இன்று மூடப்பட்டு வரும் நிலையில், அந்த கல்லூரிகளின் தரத்தை, அதில் உள்ள படிப்புகளின் எண்ணிக்கையை உயர்த்த ஏ.அய்.சி.டி.இ. நடவடிக்கை எடுத்துவருகிறது.
பிராந்திய மொழிகளில், ஏ.அய்.சி.டி.இ.மூலம் வெளியிடப்பட்ட தொழில்நுட்பக் கல்வி புத்தகங்கள், 6 லட்சத்துக்கும் அதிகமான அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. பொறியியல் துறை, மருத்துவத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. – இவ்வாறு அவர் பேசினார்.
விழாவை புறக்கணித்த உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி
பட்டமளிப்பு விழா அழைப்பித ழில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெயர் அச்சிடப்பட்டு இருந்தது. ஆனால், அவர் விழாவை புறக்கணித்துவிட்டார். இதுதொடர்பாக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜிடம் கேட்டபோது, ‘அமைச்சருக்கு பல்வேறு பணிகள் இருப்பதால், கடைசி நேரத்தில் அவரால் பங்கேற்க முடியாமல் போனதாக’ தெரிவித்தார்.
கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதத்தில் நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழா, நவம்பர் மாதத்தில் நடந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களையும் அவர் புறக்கணித்தார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரின் பதவி காலத்தை நீட்டிப்பு செய்வதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிகாலத்தை நீட்டித்து சமீபத்தில் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமைச்சர் பொன்முடி, நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.