புதுடில்லி, ஜூலை 4 மாநில கட்சிகளில் ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் மற்றும் ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டுமே எந்தக் கூட்டணியிலும் சேராமல் இருக்கின்றன. ஆனாலும், கடந்த முறை இவ்விரு கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பாஜ அரசுக்கு ஆதரவாக செயல்பட்டன. அரசு கொண்டு வரும் அனைத்து மசோதாக்களையும் ஏற்றுக் கொண்டன.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இரு கட்சிகளும் தோல்வி அடைந்தன. ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்திடம் இருந்து பாஜ ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால் இனி நாடாளுமன்றத்தில் பாஜவுக்கு ஆதரவில்லை என பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று (3.7.2024) மாநிலங்களவையில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்த போது பிஜூ ஜனதா தள உறுப்பினர்களும் ஆதரவாக வெளிநடப்பு செய்தனர். இது குறித்து அக்கட்சி மூத்த உறுப்பினர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘குடியரசுத்தலைவர் உரையிலும், பிரதமர் மோடியின் பதிலிலும் ஒடிசா மாநில மக்களின் கோரிக்கைகள் விருப்பங்கள் எதுவும் இடம்பெறவில்லை’’ என்றார்.
அதே சமயம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசாய் ரெட்டி, எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பிஜூ ஜனதா தளத்திற்கு 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 11 உறுப்பினர்களும் உள்ளனர். மக்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 உறுப்பினர்களை வைத்துள்ளது.
கடையநல்லூர் கோயிலில் நடைபெறவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் காவல்துறையினர் நடவடிக்கை
கடையநல்லூர், ஜூலை 4- கடைய நல்லூரில் நேற்று (3.7.2024) நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சுமார் 25 வயது இளைஞருக்கும், 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் நடைபெறுவதாக ‘மாவட்ட சைல்டு ஹெல்ப் லைன்’ உதவி மய்யத்திற்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து தகவலறிந்த சமூக நலத்துறை மற்றும் காவல்துறையினர் சிறார் மீட்புக்குழுவினர் சம்பந்தப்பட்ட இடத் திற்கு விரைந்து சென்று அங்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். நாதஸ்வர மேளம் முழங்க மாப்பிள்ளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்துச் சென்ற நிலையில் காவல்துறையினர் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
கோயிலில் நடைபெறவிருந்த குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.