‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒரு வன்கொடுமை

பேராசிரியர் மு.நாகநாதன்

இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 10 ஆண்டுகளுக்குள் தொடக்கக் கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்குவோம் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த உறுதி மொழியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. பல தீர்ப்புகளும் உள்ளன. இன்றளவும் இந்த அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கக் கல்விக்கான வாக்குறுதி முழுமையாக இந்தியாவின் பல மாநிலங்களில் நிறைவேற்றப்படவில்லை. இதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். மேற்கொள்ளத் தவறிவிட்டது.
மக்கள் தொகையும் மாணவர்கள் எண்ணிக்கையும் பெருகி வருகிற சூழலில் ஒன்றிய அரசுக் கல்விக்காகச் செலவிடும் தொகை குறைந்து வருகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் தொடக்கப் பள்ளிக்கல்வி அனைவருக்கும் இன்னும் வழங்கப்படவில்லை.

அது மட்டுமல்ல ஊட்டச்சத்துக் குறைபாடுகள் காரணமாகப் போதிய உடல், மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கும் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
நரேந்திரர் ஆட்சியில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கையின்படி (National Family Health Survey -5-(2021) 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 36% விழுக்காட்டினர் போதிய வளர்ச்சி இல்லாமல் குட்டை யான குழந்தைகளாக உள்ளனர் .
இவர்களில் முழுமையாக எவ்விதத் திறனும் இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2015-2016 ஆண்டில் 7.5% விழுக்காட்டிலிருந்து 7.7% விழுக்காடாக உயர்ந்துள்ளது.
நரேந்திரர் ஆட்சியில் குழந்தைகள் படும்பாடு இதுதான்.

போதிய ஊட்டச்சத்துக் குறைபாடுகள் காரணமாக வளர்ச்சி இல்லாத குட்டை குழந்தைகள் எண்ணிக்கையில்
மேகாலயா – 47%
பீகார் – 43%
உத்தரப் பிரதேசம் – 40%
ஆகிய மூன்று மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
இரத்தச் சோகை உள்ள குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ள இரண்டு மாநிலங்கள் எது தெரியுமா?
இலடாக் பகுதி – 84.1%
குஜராத் – 77.6%..
“குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கி இத்தகைய குறைபாடுகளை நீக்கிய மாநிலம் தமிழ்நாடு.”
இதைக் கூறுவது யார்?
ஒன்றிய அரசின் அறிக்கைகளை ஆய்வு செய்து, மும்பையில் இருந்து வெளிவரும் அரசியல் பொருளாதார வார ஏட்டில் ஆய்வாளர்கள் ரீமா கில், அரிசிட் சின்கா ஆகியோர் இணைந்து எழுதிய கட்டுரையில் காணப்படும் கருத்துக்கள் இவை.
(Malnutrition among Children in India – by-REEMA GILl and ARCHIT SINHA-Economic and Political weekly -April- 6-2024- Page 21to23)
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று கவிஞர் பட்டுக்கோட்டை கல்யா ணசுந்தரம் அரசிளங்குமரி என்ற திரைப்படத்தில் 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய பாடலில்
“ஆளும் வளரணும்
அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி” என்று குறிப்பிட்டிருப்பார்.
75 ஆண்டுகள் நிறைவு குடியரசு நாள் விழா எடுக்கும் ஒன்றிய அரசின் உயர் அலுவலர்களுக்கும் நரேந்திரருக்கும் இந்த விவரங்கள் தெரியாதா என்ன?
ஒடுக்கப்பட்ட பிரிவினர் கல்வியிலும், அறிவிலும் வளர்ந்துவிட்டால் 3 விழுக்காடு ஆதிக்கச் சமுதாயத்தினரின் பேராதிக்கம் பேராபத்தில் முடிந்துவிடும் அல்லவா?
கல்வியைக் கொடுக்காதே
ஊட்டச்சத்தை அளிக்காதே
பல இலட்சம் குழந்தைகள் வளர்ச்சியைக் காணாமல் செடி கொடிகள் போன்று
மண்ணோடு மக்கிச் சாகட்டும்.
இதைத்தானே இந்தப் புள்ளிவிவரங்கள் சான்று பகிர்கின்றன.
இதைத் தவிரப் பசியால் வாடும் குடும்பங்கள் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டுகிறது.
உலக ஏற்றத் தாழ்வு அறிக்கையில், பெரும்பாலான மக்கள் இந்தியாவில் வளர்ந்து வரும் வருமான, செல்வ ஏற்றத் தாழ்வுகளால் படும் அல்லல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
2021 உலகப் பட்டினிப் பட்டியல் அறிக்கையின்படி உலகின் 117 நாடுகளில் இந்தியா பெற்ற இடம் 101 ஆகும்.
குடும்பமும் பட்டினி
குழந்தைகளும் பட்டினி.
இவ்விதக் கொடுமையான நெருப்பு வளையத்தைத் தாண்டி
16 வயதினர்
பள்ளி இறுதி வகுப்பு வரை
படிப்பது என்பதே ஒரு பெரும் அறைகூவல் ‌.
கல்வி சமுதாயத்தில் பின்தங்கிய பல இலட்சம் மாணவர்கள் வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி பள்ளிக்கல்வியை முடித்துக் கல்லூரிக் கல்வியைத் தொடர முயற்சி செய்தால் கியூட், நீட், நெட், நெக்ஸ்ட் என்று அறிவித்து நுழைவுத் தேர்வைத் திணித்து, சமூக நீதியைப் பாழும் கிணற்றில் தள்ளி வேடிக்கை பார்க்கின்றனர்
ஒன்றிய அரசை ஆட்டிப் படைக்கும் ஆணவ ஜாதியினரின் சங்கிக்கும்பல்.
10 ஆண்டுகளாக நுழைவுத் தேர்வைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்ட ஆரியக் கூத்தாடிகளின் சதி கிடங்கு இன்று ஊழலால் வெடித்துச் சிதறியிருக்கிறது.
மொத்த மருத்துவப் படிப்புகளுக்கான இடம் ஏறக்குறைய ஒரு இலட்சம்.
அதில் பாதி அரசுக் கல்லூரிகள் – பாதி தனியார் கல்லூரிகள்.

நீட் நுழைவுத் தேர்வில் சுழியம் மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.
இது தான் நுழைவுத் தேர்வின் தகுதியா? நுழைவுத் தேர்வு தனியார் பயிற்சி மய்யங்கள் பயிற்சிக்காக மாணவர்களிடம் பெரும் பணத்தொகையின் அளவு ஒரு இலட்சம் கோடியாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா பகுதியில் பல ‌நூற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வு மய்யங்கள் செயல்படுகின்றன.
இங்குப் பல மாணவர்கள் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளாக நடுத்தரக் குடும்பங்கள் நுழைவுத் தேர்வு முறையை நம்பி செலவு செய்து இழந்த பணத்தொகை பல ஆயிரம் கோடிகள் ஆகும்.

இப்போது வெடித்துக் கிளம்பிய நீட் தேர்வு ஊழல் புதிதல்ல. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நுழைவுத் தேர்வின் சிறிய அளவுதான் இன்று வெளிப்பட்டு இருக்கிறது.
அதானி செய்த மோசடிகள் மீது அமெரிக்கத் தணிக்கை நிறுவனம் அளித்த ஹிண்டன்பர்க் அறிக்கையை விஞ்சும் அளவிற்கு நீட் ஊழல் நீண்டு கொண்டு வருகிறது.
மேலும் நீட் தேர்வு, பள்ளிக் கல்வியின் அடிப்படை கூறுகளைச் சிதைத்து வருகிறது.
18 வயது இளைஞர்களின் மனநிலையைப் பாதித்து மன அழுத்தத்தைத் தூண்டுகிறது.
இது இளைஞர்கள் மீதும் ஏழை நடுத்தரக் குடும்பங்கள் மீதும் நடத்தப்படும் வன்கொடுமை தாக்குதல் ஆகும் ‌.
நல்ல வேளை வடக்கு மாநிலங்களும் தற்போது விழித்துக் கொண்டன.

எனவே, நீட் போன்ற அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் நீக்குவது தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.
ஆசிரியர் வீரமணியார் கூறுவது போன்று மக்கள் மன்றத்தில் இந்த நீட் மோசடிகளை அம்பலப்படுத்திக் களம் காணவேண்டும்.
தந்தை பெரியார் 1950 ஆம் ஆண்டில் இட ஒதுக்கீடு கொள்கை வெற்றி பெறக் களம் அமைத்தார்.
முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தம் வழியாக சமூக நீதியை வென்று எடுத்தார்.
பெரியார் காட்டிய வழியைப் பின்பற்ற இன்று பல வட இந்தியக் கட்சிகளும் ஆதரவினைத் தெரிவித்து வருகின்றன.
தொடர் பரப்புரை செய்வோம்.
களங்கள் பல காணுவோம்.
நீட் எனும் வன்கொடுமையைத் தகர்ப்போம் ‌
சமூக நீதியைக் காப்போம்

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *