மாநிலங்களவையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே முழக்கம்!
புதுடில்லி, ஜூலை 4 மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரையைத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றது. அப்போது மாநிலங்களவையில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல், மகாத்மா காந்தி, அம்பேத்கர், சிவாஜி உள்ளிட்டோரின் சிலைகளை இடம் மாற்றி, தலைவர்களை அவமதித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
நீட் மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் பேசினால், பிரதமர் மாங்கல்யத்தை பற்றி பேசுகிறார். மணிப்பூரில் ஓராண்டுக்கு மேலாக பிரச்சினை நீடிக்கும் நிலையிலும், பல நாடுகளுக்குச் செல்லும் பிரதமர், மணிப்பூர் செல்ல மறுக்கிறார். மக்கள் பிரச்சினைகளை பிரதமரும் பேசுவதில்லை. பா.ஜ.க.வும் பேசுவதில்லை” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசினார்.
மேலும் மல்லிகார்ஜூன கார்கே பேசும் போது, கல்வி அமைப்புகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகள் நிய மிக்கப்பட்டுள்ளனர். இராணுவப் பள்ளிகளின் நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது எனக் கூறினார். இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
நாட்டுக்குக் கேடான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம்!
ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தம் நாட்டுக்குப் பெரும் ஆபத்தானது என மாநிலங்களவைவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்தார். இதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பிரதமர் மோடி மணிப்பூர் மக்களை நேரில் சென்று சந்திக்காதது, நீட் தேர்வு மோசடிகள் ஆகியவற்றையும் மல்லி கார்ஜூன கார்கே காட்டமாக விமர்சித்தார்.
மணிப்பூர் மாநிலம் கடந்த ஓராண்டாக பற்றி எரிகிறது. ஆனால், பிரதமர் மோடி வெற்று முழக்கங்களைத்தான் முன்வைத்து வருகிறார். இதுவரை மணிப்பூர் மக்களை நேரில் சென்று சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறவே இல்லை. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாட்டை பிளவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசினார். நாட்டின் பிரதமராக பதவி வகித்த யாருமே அப்படியான பேச்சுகளைப் பேசியதும் இல்லை.
அக்னிபாத் திட்டம்
அக்னிபாத் திட்டம் என்ற துக்ளக் திட்டமானது நாட்டின் இளைஞர்களை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது. எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் கொண்டு வரப்பட்ட அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே ரத்து செய்யவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு அபாயமகரமானது
நாட்டின் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிகளை, பேராசிரி யர் பதவிகளை ஆர்.எஸ்.எஸ். ஆக்கிர மித்திருக்கிறது. நாட்டின் உயர் கல்வி நிறு வனங்களை என்சிஇஆர்டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிடியில் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் இந்த நாட்டுக்குப் பெரும் அபாயத்தை விளைவிக்கக் கூடியது.
நீட் தேர்வு முறைகேடுகள்
நீட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ஒன்றிய அரசு நடத்தும் பொதுத் தேர்வுகளில் 70 வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி இருக்கிறது. வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை என முதலில் ஒன்றிய அரசு மறுத்தது. அதன் பின்னர் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகவும் ஒப்புக் கொண்டது ஒன்றிய அரசு.
எதிர்க்கட்சிகள் மீது அடக்குமுறை
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படு வோம் என குடியரசுத் தலைவர் தமது உரையில் தெரிவித்திருந்தார். ஆனால், அது வெறும் பேச்சளவில்தான்.. நடை முறையில் இல்லை. எதிர்க்கட்சிகளை அடக்குவதற்காக, எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்குவதற்காகவே ஒன்றிய அரசின் விசாரணை ஏஜென்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அரசமைப்புச் சட்டம்
மக்களவை தேர்தலானது அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. பாஜகதான் அரசியல் சாசனத்தை திருத்துவோம் என்றது. பிரச்சனைகள் வரும் போகும். அரசமைப்புச் சட்டம்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துவிட்டன. இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சிகளையே மக்கள் ஆதரித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் காலம் காலமாக இருந்து வரும் தலைவர்கள் சிலைகள் வேறு இடத்துக்கு அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் நடத்தப்படவே இல்லை.
இவ்வாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.