புதுமை இலக்கிய தென்றலின் சார்பில் “தவிப்பு’’ கவிதை நூல் வெளியீட்டு விழா

சென்னை ஜூலை 4- பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் 1.7.2024 மாலை 6 மணிக்கு தேன்மொழி எழுதிய ‘தவிப்பு’ கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு புதுமை இலக்கிய தென்றல் தலைவர் பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.

வேலூர் மாவட்டம் பகுத்தறி வாளர் கழக மாவட்ட அமைப் பாளர் முனைவர் வினாயகமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். வேலூர் மாவட்ட பகுத்தரிவாளர் கழக துணைத் தலைவர் க.சையத் அலீம் இணைப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்விலே பகுத்தறி வாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தொடக்க உரையாற்றினார். நிகழ்விலே திரைப்பட இயக்குநர் ச.ஜெயக் குமார், வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், பேராசிரியர் முனைவர் மஞ்சுளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

நூல் திறனாய்வு:

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் நேரு அவர்கள் நூல் திறனாய்வு செய்தார். ஆணின் நிர்வாணம் கடவுள் ஆகிறது பெண்ணின் நிர் வாணம் காட்சி ஆகிறது என்ற வரிகளில் தொடங்கி உடலரசியல், படிமனாக போன்ற பல்வேறு கவிதைகளை எடுத்துக்காட்டி மிகச்சிறப்பான ஒரு திறனாய்வை அளித்தார்

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

இந்த நிகழ்விலே சிறப்பாக கலந்துகொண்டு நூலினை பெற்றுக்கொண்டு உரையாற்றிய திராவிட இயக்க தமிழர் பேர வையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

பெண் பேசக்கூடாது பெண் தலைநிமிர்ந்து நடக்கக்கூடாது பெண் சிரிக்க கூடாது என்கிற முரண்பாடுகளை எல்லாம் உடைத்து போடுகிறது இந்த நூல். அரை நூற்றாண்டாக தன் வாழ்க்கையை இந்த சமூ கத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட கவிஞர் கழகத்தின் துணைத் தலைவர் இந்த நூலை வெளியிடுகின்றார். வடநாட்டில் ஆண்கள் நிர்வாணமாக நடக்க முடியும் ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்காது அதற்கு காரணம் இங்கே இருக்கும் கருஞ்சட்டை அரசியல்.

கவிஞர்.கலி பூங்குன்றன்

‘தவிப்பு’ என்ற நூலை வெளி யிட்டு சிறப்புரை ஆற்றினார் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். இந்த நூலில் மனம், குணம், சினம் எல்லாம் இருக்கு தமிழ்நாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட நூல்களை பெண்கள் எழுத முடியும், இந்த நூலில் நான் தேடித்தேடி பார்த்தேன். பெரியார் என்ற ஒரு சொல் எங்கேயும் இல்லை. ஆனால் ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு வரியிலும் பெரியார் இருக்கிறார். பெரியார் சொல்கிறார் மக்கள் தொகையில் 50 சதவீதமே இருக்கும் பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆக்கியதால் இந்த சமூகம் சீர்கெட்டுப் போனது. பெரும் நஷ்டம் ஆனது.பெண்கள் மத்தியில் பெரும் புரட்சி உண்டாகக் காரணம் சுயமரியாதை திருமண மேடையை தந்தை பெரியார் பிரச்சார மேடையாக மாற்றியது தான். பெரும் எழுச்சி ஏற்பட்டது.

தேன்மொழியே கவிதை தான். திறமைகள் குவிந்து கிடக்கின்றது. ஆண்களே பேச சங்கடப்படும் விஷயங்களை தேன்மொழி போன்றவர்கள் துணிந்து பயன்படுத்தி இருக்கின்றார்கள். இவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். யாராவது ஒருத்தர் பேசி தானே ஆக வேண்டும். தேன்மொழி ரொம்ப சிறப்பாக மிகவும் ஆழமாக எழுதி உள்ளார். வாய்ப்புகள் கிடைக்கும் போது தான் இவ்வளவு ஆழமான சிந்த னைகளை வெளிப்படுத்த முடியும்.

இந்த கவிதை புத்தகம் படித்து வாசிப்பதற்காக மட்டுமே இல்லாமல் சிந்தனையை தூண்டு வதாக அமைந்திருக்கிறது. பெண்களிடம் பொருளாதார பலம் இருக்க வேண்டும். தேன் மொழியால் கவிதை எழுத முடியும் என்றால் அது அவர்களால் எழுதப்பட்டது என்பதை விட பெரியாரின் சிந்தனைகளால் கவரப்பட்டு அந்த உந்துதலால் எழுதப்பட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். முயன்றால் முடியும் எழுதுங்கள் எழுதிக் கொண்டே இருங்கள் என்று தன் உரையில் குறிப்பிட்டார்.

அடுத்து பேசிய நூலாசிரியர் தேன்மொழி தனக்கு அடையா ளத்தையும் இந்த சமுகத்தை அறிய வைத்ததும் பெரியாரிய சிந்தனைகளும் திராவிட இயக்கமுமே என்று குறிப்பிட்டார். நிகழ்வை சிறப்பித்தவர்களுக்கு நன்றியும் எழுத்து மூலமாக வாழ்த்துரை வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி கூறினார்.

இறுதியில் ஓசூர் மாவட்ட மகளிரணித் தலைவர் செல்வி நன்றி கூறினார்.

இந்த நிகழ்வில் திராவிடர் கழகத் தோழர்கள் உறவினர்கள் முகநூல் நட்புகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *