நீட் விலக்கு கோரி பயணிக்க உள்ள ‘மோட்டார் சைக்கிள் பரப்புரை’யில் பெருவாரியாக பங்கேற்க தென் சென்னை கழக மாவட்டம் முடிவு

viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 3- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 1.7.2024 மாலை 6.30 மணியளவில், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் தலை மையிலும், மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன் கடவுள் மறுப்பு கூற, தென் சென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு. பவானி வரவேற்புரை ஆற்றினார்.

11.07.2024 ஆம் நாள் தமிழ்நாட்டின் அய்ந்து முனைகளிலிருந்து அய்ந்து குழுக்கள், மருத்துவ படிப்பிற்கு நஞ்சாக அமைகின்ற ‘நீட் தேர்வை திரும்பப் பெறக்கோரி’ மோட்டார் சைக்கிள் மூலம் பரப்புரை செய்து கொண்டு 15.07.2024 மாலை சேலம் சென்றடைய உள்ளது.

அதில் ஒரு குழுவான அய்ந்தாம் குழு சென்னையில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை உள்ளடக்கி சுமார் 600 கிலோ மீட்டர் பயணித்து சேலம் சென்றடைய உள்ளது.

இப் பயண திட்டம் குறித்து விளக்கி மாநில இளைஞரணி துணைத் தலைவர் சோ.சுரேஷ் நோக்க உரையாற்றினார்.
மாவட்ட பொறுப்பாளர்கள், பகுதி கழக பொறுப்பாளர்கள் கருத்துரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில், பரப்புரைப் பயணத்தில் குறைந்தது 3 மோட்டார் சைக்கிள்களில் பங்கேற்பது எனவும், தென் சென்னை மாவட்ட பகுதியில் பயணக் குழு வரும் பொழுது பெருவாரியான தோழர்கள் பங்கேற்பதெனவும், அறிவிக்கப்பட்ட மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அடையாறு, தரமணி மற்றும் அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்களை ஏற்பாடு செய்வது எனவும், பயணம் முடிவடையும் சேலம் பொதுக்கூட்டத்தில் பெருவாரியான கழகத் தோழர்கள் பங்கேற்பதெனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

மயிலாப்பூர் ஈ. குமார், எம்.ஜி.ஆர் நகர் கரு.அண்ணாமலை, அய்ஸ் அவுஸ் சி.செல்வராசு, கலைஞர் நகர் செல்வம் மற்றும் கலைமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சூளைமேடு நல்.இராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *