தந்தை பெரியார் சுயமரியாதை மண்ணிலிருந்து வந்துள்ளேன்! திராவிடக் கொள்கை பெருவெளி எங்கும் பரவ வேண்டும் முகலாயர்கள் அந்நியர் என்றால் ஆரியர்களும் அந்நியர்களே!

புதுடில்லி, ஜூலை 2 எனது முன்னோர்கள் வறுமையில் இருந்தனர். இன்று இந்த ஆ.இராசா நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியோடு நிற்கிறேன், மோடியோடு பேசுகிறேன், எனது மகள் லண்டனில் புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கிறார் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கைகொண்ட திராவிடக் கொள்கை, இந்த திராவிடக் கொள்கை பெருவெளி எங்கும் பரவ வேண்டும் என்று ஆ. இராசா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாள்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். பின்னர் மூன்றாம் நாள் நடைபெற்ற மாநிலங்களவைத் தலைவர் தேர்தலில் பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லா மீண்டும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்
ஆ. இராசா பேசியதாவது:

“ஒன்றிய அரசு பாசிச கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. ஹிந்துக்கள் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் ஆகியோரை ஒன்றியஅரசு குறிவைக்கிறது. இது தான் பாசிசம்; இது தான் இனவாதம். பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோரை பா.ஜ.க. அரசு ஒடுக்கப் பார்க்கிறது. பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் சர்வாதிகாரமாக உள்ளன. பா.ஜ.க. அரசு நினைப்பதை அவர்களாக சொல்வது இல்லை. குடியரசுத் தலைவர், மக்களவைத் தலைவர் மூலமாக சொல்கின்றனர். பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து வந்துள்ளேன். திராவிட மண்ணில் பாசிச பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள். திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும். பாசிச கொள்கையை கடைப்பிடிக்கும் பாஜகவுக்கு அவசரநிலை குறித்துப் பேச எந்த உரிமையும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர். 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக பெரும்பான்மை எப்படி என்று கூறமுடியும்?

நெருக்கடி நிலையை அமல்படுத்தியதற்காக இந்திரா காந்தி பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். இந்திரா காந்தி தெரிவித்த மன்னிப்பை மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். அதன்பிறகு மக்கள் அவரை மீண்டும் பிரதம ராக்கினார்கள்.

பிரதமர் மோடி கடவுளா?

மோடியைக்கூட கடவுளின் தூதராக ஏற்றுக்கொள்ளத் தயார். ஆனால், அவருக்கு அத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அப்படி எந்த தகுதியும் இல்லை என்பது தான் பிரச்சினை. அதனால்தான், அவரை அப்படி நம்ப முடியவில்லை” என்று ஆ. ராசா கூறினார்.

பாஜக ஆட்சியாளர்களுக்கு அவசரநிலை குறித்து பேச எந்த உரிமை கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் பாசிசத்துக்கு எதிராக 2ஆவது முறையாக வாக்களித்துள்ளார்கள். 300க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிப்போம் என்று மோடி கூறினார். ஆனால் மக்கள் அதனை நிராகரித்துள்ளார்கள். 240 இடங்களை மட்டும் வைத்துள்ள பாஜக ஆட்சியை எப்படி பெரும்பான்மை அரசு என்று குடியரசுத் தலைவர் உரை மூலம் கூற முடியும்? பெரும்பான்மை அரசு என்று கூறுவதே பொய்யானது.

தமிழ்நாட்டைக்குக் குப்பைத் தொட்டியாக மதிப்பதா?

நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பினோம். இன்னும் ஏற்கப்படவில்லை. நீங்கள் தமிழ்நாட்டை மதிக்கவில்லை. எங்களை குப்பைத் தொட்டி போல் நடத்துகிறீர்கள். அதனால்தான் தமிழ்நாடு 40 தொகுதிகளிலும் உங்களை தோற்கடித்து பாடம் கற்பித்துள்ளது!

உலகம் முழுவதும் தொழில் பிரிவினை இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் தொழிலாளர் பிரிவினை இருக்கிறது. இதைத்தான் பெரியாரும் அம்பேத்கரும் சொல்கின்றனர். இந்தப் பிரிவினையைத்தான் இந்து மதம் என்கிற பெயரில் நீங்கள் தொடர விரும்புகிறீர்கள்!

உயர் ஜாதி கட்டமைப்பு!

பொதுத்துறையில் லாபம் இல்லை என எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிற்படுத்தப்பட்டோருக்கும் பட்டியல் ஜாதியினருக்கும் எப்படி அரசு வேலை கிடைக்கும்? இட ஒதுக்கீட்டை மறைமுகமாக அழிக்கவே நீங்கள் இதை செய்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் உயர் ஜாதிகள் நடத்தும் இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்க விரும்புகிறீர்கள்.

நீட் தேர்வு மூலம் Majority, Management, Payment என்று மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால்தான் நீட் தேர்வு முறையை எதிர்க்கிறோம். 8 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளது. ஆங்கிலேயர்களிடம் அடிமைகளாக இருந்தோம் என்று இவர்களின் தலைவர்கள் கூறினார்கள், ஜனசங்கத் தலைவர் சியாமாபிரசாத் முகர்ஜி உட்பட அடிமைகளாக இருந்தது உண்மைதான். காரணம் 200க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இங்கிலாந்தில் இருந்து அவர்கள் காலனி நாடுகளை ஆண்டார்கள்.

ஆரியர்கள் அந்நியர்கள் இல்லையா?

ஆனால் இவர்கள் 600 ஆண்டுகளுக்கு முன்பு சென்று முகலாயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திவிட்டார்கள் என்கிறார்கள் முகலாயர்கள் துருக்கியில் இருந்து ஆட்சி செய்யவில்லை. இங்கே வந்தார்கள் ஆட்சி செய்தார்கள் 600 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து ஆட்சி செய்த முகலாயர்கள் அந்நியர்கள் என்றால், அதற்கு முன்பாக கைபர் போலன் வழியாக இந்தியாவிற்குள் வந்த ஆரியர்களும் அந்நியர்கள் தான். இந்த மண்ணிற்கு சொந்தமானவர்கள் என்ற உரிமையைக் கொண்டாட தகுதிவாய்ந்தவர்கள் திராவிடர்கள் மட்டுமே இதை அம்பேத்கர் கூறினார்
நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்துள்ளேன். ‘‘சட்டத்தின் படி இன்றும் என்னை தாழ்த்தப்பட்டவன் என்றே அழைக்கப்படுகிறேன், , எனது முன்னோர்கள் வறுமையின் காரணமாக இலங்கை சென்று பொருள் ஈட்டினார்கள். அவர்களுக்குக் கல்வி அறிவு இல்லை. ஆனால் இன்று அவர்களது வாரிசான நான் இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தியோடு சமமாக அமர்ந்திருக்கிறேன். எனது மகள் இலண்டனில் மிகவும் புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கிறார்.

திராவிடர் கொள்கைகள் தேவை!

இது எப்படி வந்தது, யார் தந்தது? தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் உழைப்பு – இவர்களின் திராவிடக் கொள்கை, ஆகவே தான் திராவிடக்கொள்கை இந்த பேரண்டம் எங்கும் பரவேண்டும் என்கிறேன் . எனவே திராவிட கொள்கைகள் ஏன் நாட்டுக்கு தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.

அதானி மோசடி விவகாரத்தில் பதில் சொல்ல பிரதமருக்கு முதுகெலும்பு இல்லை. எதிர்க்கட்சிகள் 15 நாட்கள் கருப்புச் சட்டை அணிந்து நாடாளுமன்றம் வந்து எதிர்ப்பைத் தெரிவித்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை. முறைகேடுகளுக்குப் பதில் அளிக்காமல் மௌனமாக இருக்கும் அரசு இதுவரை நான் பார்த்ததில்லை என்ற வரலாற்றுச் சிறப்புரையை மக்களவையில் பதிவு செய்தார் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *