புதுடில்லி, ஜூலை 2 புதிதாகத் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள மக்களவை முதல் கூட்டத் தொடரிலேயே பா.ஜ.க.வை தனது பேச்சால் திணறடித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி. பிரதமர் மோடி, பரமாத்மாவுடன் கூடப் பேசுவார்.. ஆனால், மணிப்பூர் மக்களுடன் பேச மாட்டார் என கடும் விமர்சனம் செய்தார்.
நடந்து முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலை அடுத்து உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டடத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். இதை அடுத்து முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (1.7.2024) குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச வேண்டும் என கோரிக்கை
விடுத்தனர்.
“வாழ்க அரசியல் சாசனம்!’
ஆனால், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துகளைக் கூறலாம் என பேரவைத் தலைவர் கூறியதால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க.வையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “வாழ்க அரசி யல் சாசனம்” என ராகுல் காந்தி தனது பேச்சை தொடங்கிய போது, பா.ஜ.க. வினர் “பாரத் மாதா கி ஜே” என முழக்கமிடத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அவர்களை பேரவைத் தலைவர் சமாதானம் செய்தார். தொடர்ந்து ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசினார். தற்போது நாங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாது காத்திருக்கிறோம்.. என் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன. நான் வசித்த வீட்டை பா.ஜ.க. பறித்துக் கொண்டது. ஆனாலும் தொடர் தாக்குதல்களில் இருந்து அரசமைப்புச் சட்டத்தை நாங்கள் காப்பாற்றி வருகி றோம்.
பண மதிப்பிழப்பு – பரமாத்மாவோடு எடுக்கப்பட்ட முடிவு!
பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடவுளுடன் நேரடி தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார். அவர் நேரடியாகவே பரமாத்மாவுடன் பேசுவார். பரமாத்மாவும் நேரடியாகவே மோடியின் ஆன்மாவோடு பேசுவார். நாம் எல்லோரும் பயாலஜிக்கலாக பிறப்போம்.. மரணத்தை தழுவுவோம்.. ஆனால், பிரதமர் அப்படிப்பட்டவர் அல்ல.. அவர் “நான்-பயாலஜிக்கல்.” அவர் பரமாத்மாவிடம் கேட்டு தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தாரா?
ஹிந்துக்களின் உண்மையான பிரதிநிதிகளா பி.ஜே.பி.யினர்?
பிரதமர் நரேந்திர மோடி, திரைப்படத்தின் வழியாகத்தான் காந்தி மீண்டும் உலகால் அறியப்பட்டார் என்கிறார். பிரதமர் மோடியின் அறியாமையை உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடிகிறதா? பா.ஜ.க.வினர் உண்மையான ஹிந்துக்கள் அல்ல. அவர்கள் ஹிந்து மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசியபோது, பா.ஜ.க.வினர் அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், ராகுலின் பேச்சு, ஹிந்து சமூக மக்கள் மீதான தாக்குதல் என்றும், ஹிந்துக்களை அவர் வன்முறையாளர்கள் போல சித்தரிக்க முயலுகிறார் என்றும் பிரதமர் மோடி குறுக்கிட்டுக் கூறினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, மோடி இந்தியாவின் பிரதமர் தான். ஹிந்துக்களின் பிரதிநிதி அல்ல; உண்மையான ஹிந்துக்கள் வெறுப்பு ணர்வைத் தூண்ட மாட்டார்கள்” எனப் பேசினார். அதற்கு அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ராகுல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென பா.ஜ.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.