புதுடில்லி, ஜூலை 1- நாடு முழுவதும் இன்று (1.7.2024) முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் அந்த சட்டங்கள் அமல் படுத்தப்பட உள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் 5.65 லட்சம் காவல் துறையினர், சிறை, நீதித்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இந்த சட்டங்கள் குறித்து பயிற்சி அளித்து தயார்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் மும்முரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதே நேரத்தில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவை மீறும் வகையில், இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக, ஒன்றிய அரசு இம்மூன்று புதிய சட்டங்களை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.