பருவமழைக் காலங்களில் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச் சல்கள் பரவுவது இயல்பு. பருவமழை பொழியும் மாதங்களாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களைக் குறிப்பிடுவோம்.
அந்தக் காலகட்டங்களில் சுகாதாரத் துறையும் விழித்துக்கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பது, கொசு உற்பத்தியைத் தடுப்பது எனத் தனது பணிகளைச் செய்யத் தொடங்கும்.
ஆனால், தற்போது காலம் தவறிப் பெய்யும் மழை அதிகமாகிவிட்டது. அதனால் இந்தக் காலத்திலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நாடு முழுவதும் வெப்ப அலை வீசிய போதிலும் உத்தரப்பிரதேசத்தின் சோன்பந்த்ரா மாவட்டத்தின் கிராம மக்கள் பலரும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச் சரிக்கையாக எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா.
மலேரியா நோய் என்பது “அனோஃபிளஸ்” எனும் கொசு இனம் கடிப்பதால் ஏற்படக்கூடிய நோய்.
ஏற்படாமல் இருக்க
என்ன செய்ய வேண்டும்?
கொசு கடிக்காமல் இருக்க கொசு வலை யைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு கையுறை, காலுறை என உடல் முழுவதும் மூடும் உடைகளை அணிவிக்க வேண்டும்.
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமலும், கொசு உற்பத்தி ஆகாமலும் தவிர்க்க வேண்டும்.
கொசு விரட்டி, கொசு எதிர்க்கும் களிம்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
மலேரியா பரவல் அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லும்போது பிளாஸ்மோடியம் கிருமிக் கொல்லிகள் மாத்திரைகளை உட்கொள்ளலாம். ஆனால், இதை மருத்துவர்களது பரிந்துரையின் பேரில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மலேரியா அறிகுறிகள் என்னென்ன?
குளிர் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, அதிகமான வியர்வை சில நேரங்களில் இந்த அறிகுறிகள் ஏற்படும்போது, மக்கள் சாதாரண காய்ச்சல் என்று எடுத்துக்கொண்டு கவனிக்காமல் விட்டுவிடுவர். இது முற்றிலும் தவறு. என்னவாக இருந்தாலும் மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.
முக்கியமாக, ஓரிரு நாள்கள் காய்ச்சல் இருந்தால் உடனே ரத்தப் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை பாதிக்கப்பட்டால்…
மலேரியா உறுதி செய்யப்பட்டால் அதற்கான ப்ளாஸ்மோடியம் கொல்லி சிறப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது. மலேரியா நோய்க்கான சிகிச்சை மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே கிடைக்கின்றன.
நாம் கண்டு கொள்ளாமல் இருந்தால் மூளையை பாதிக்கக்கூடிய செரிப்ரெல் மலேரியா வகையாகவும் மாற்றமடையும். இது முக்கிய உள்ளுறுப்புகளை பாதித்து உயிரைப் பறிக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.
சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்வதன் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் காக்க முடியும். மேலும், மலேரியாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படும் தடுப்பூசியைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது” என்று விளக்கினார்.