அந்நாள் – இந்நாள்!

viduthalai
2 Min Read

ஆசிரியர் வேலாயுதம் பிறந்த நாள் – 01.07.1910

எட்டாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை முடித்துவிட நேரிட்ட அவர் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியரானார். உடையார்பாளையத்தில் சுயமரியாதைக் கொள்கைகள் காட்டுத் தீயெனப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ஆசிரியத்தொண்டுக்கு வந்த இவர் இயக்கத்தில் ஆழமான பற்றுக்கொண்டு அக்கொள்கைகளை மக்களிடத்திலும், வாய்ப்பேற்படும் போது மாணவர் களிடத்திலும் பரப்புவதைத் தம் கடமையாகக் கரு தினார் உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம்.

“பெரியமனிதர்களின் கண்ணும் கருத்தும் இயற்கையாய் இவர்மீது விழுந்தன. பிறகு சொல்லவா வேண்டும்? சுயமரியாதையாம், சுயமரியாதை! அவன் மரியாதை(?)யாக அடங்கிக் கிடக்கப் போகிறானா இல்லையா? என்று கேட்டனர் சிலர்; எதற்கய்யா இந்தவம்பும் பொல்லாப்பும்? என்று நல்லெண்ணத்தோடு கருத்துச் சொன்னவர்கட்கு விளக்கங்கள் அளித்தவர் இவர்! மிரட்டியவர்களுக்கும் எச்சரிக்கைக் கடிதங்களுக்கும் பணிவதாக இல்லை அவர்.

கல்லுடைத்து, நிலந்திருத்தி, வியர்வையைச் சிந்தி, மாடமாளிகைகளை ஆக்கிய தொழிலாளி எண்சாண் உடம்பைக் குறுக்கிப்படுத்து, வற்றிய முகமும் குழியான கண்களுமாய் மீண்டும் வெளிக்கிளம்பி நீர்மூழ்கி முத்தெடுக்கும் இயந்திரமாகிறான் பாட்டாளி. புரியாத மொழியிலே தெரியாத சொற்களைப்பேசி எந்த உழைப்புமில்லாமல் ஏய்த்துப் பொருள் பெற்று இன்பமாய்க் காலங்கழிக்கிறான் பார்ப்பான்! இந்தச் சுரண்டல் தவறல்லவா?” என்று முழங்குவதை அவர் நிறுத்திக் கொள்ளவேயில்லை. இரண்டாம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் இயக்க நிலையினை எடுத்து விளக்குவதில் மிக்க ஈடுபாடு காட்டினார்.

இவரது மகள் சிறுமி மங்கையர்க்கரசியையும் கூட இயக்கத் தொண்டு செய்யுமாறு பயிற்றுவித்தார். இந்தத் தொண்டிற்கு விலையாக விலை மதிப்பற்ற தம் உயிரைத் தரலானார். 1947 நவம்பர் 13ஆம் நாள் காலையில் ஸனாதன சக்திகளின் சூழ்ச்சியால் அடித்துக் கொல்லப்பட்டார் – தூக்கிலிடப்பட்டார்.

வாழ்க உடையார்பாளையம் ஆசிரியர் வீரர் வேலாயுதம்!
– – – – –

புலவர் குழந்தை பிறந்த நாள் – 01.07.1906

இந்நாள் - அந்நாள்

தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் புலவர் குழந்தை தம்மை இணைத்துக் கொண்டார். சுயமரியாதைக் கொள்கையில் உறுதியுடையவராய்த் திகழ்ந்தார். இறை நம்பிக்கை இல்லாதவர். 1938, 1948 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டார். வேளாண் என்னும் மாத இதழை நடத்தினார். விதவை மணம், கலப்பு மணம், சீர்திருத்தமணம் ஆகியவற்றை முன்னின்று நடத்தினார். திருக்குறள் குழந்தை உரை என்ற நூலினை இருபத்தைந்து நாட்களில் எழுதி வெளியிட்டார்.

புலவர் குழந்தை தமிழ்ச் செய்யுள் மரபினைச் சிதை யாமல் காக்க வேண்டும் என்னும் கருத்துடையவராவார்.

திராவிட இயக்கப் பேராசிரியரான புலவர் குழந்தை எழுதிய ‘ராவண காவியம்’ 1946இல் வெளியானது. இது ராவணனை நேர்மறைப் பாத்திரமாகவும் ராமன், லக்ஷ்மணன் ஆகியோரை எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நூல் 1948ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டது. 1972ஆம் ஆண்டில்தான் கலைஞர் ஆட்சியில் இந்தத் தடை நீக்கப்பட்டது. ராவணன் மிக நல்ல குணங்களை உடையவாரகவும், போற்றத்தக்கவராகவும் ஒரு கருத்தை உருவாக்கியதில் இந்த புத்தகத்திற்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

இந்தியாவில் எத்தனையோ இராமாயணங்கள் உள்ளன. வங்க மொழி இராமாயணத்தில் இராவணின் மகள் சீதை என்று உள்ளதே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *