புதுடில்லி, ஜூன்.29- நீட், நெட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து டில்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்பினர் 3-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும்; ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை மாணவர் அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் அகில இந் திய மாணவர் சங்கம், காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் உள்பட பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த 26ஆம் தேதி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்து பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்ற னர். எனினும் நேற்று முன்தினம் (27.6.2024) மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர் அமைப்பினர் திரண்டு 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடு பட்டனர்.
அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது.
இந்த நிலையில் 3ஆவது நாளாக நேற்றும் (28.6.2024) டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாணவர் அமைப்பினருடன் இளைஞர் காங்கிரசாரும் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தேசிய தேர்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.