‘நீட்’ : ரூ.300 கோடி இலக்கு; 700 மாணவர்களுக்கு விற்க திட்டம்! வெளிச்சத்திற்கு வந்த முறைகேடு

மோ. நாக அர்ஜுன், சே. பாலாஜி

300 கோடி ரூபாயை இலக்காக வைத்து நீட் மோசடி யில் ஒரு கும்பல் ஈடுபட்டது தொடர்பாக தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், 300 கோடி ரூபாயை இலக்காக வைத்து நீட் மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டது தொடர்பாக தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நீட் வினாத்தாள் மோசடிக் கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்ட பிஜேந்தர் குப்தா கைதுசெய்யப்பட்டதையடுத்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, நீட் வினாத்தாள்களை தேர்வு மய்யங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் உதவியுடன் வினாத்தாள்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. வினாத்தாள் அடங்கிய பெட்டிகளை சாதுர்யமாக உடைத்து அவற்றை திருடி விற்று வந்துள்ளது பிஜேந்தர் குப்தா கும்பல். வினாத்தாள் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக பல போக்குவரத்து நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கறுப்புப் பட்டியலில் இருந்தபோதும் பல தில்லுமுல்லு செய்து வினாத்தாள் எடுத்துச் செல்லும் ஒப்பந்தத்தை அவை பெற்று வந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது.

மேலும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ரூ.300 கோடி வரை இலக்கு நிர்ணயித்து செயல்பட்டதாகவும், 700 மாணவர்களுக்கு வினாத்தாளை விற்க திட்டமிட்டதாகவும் வினாத்தாள் மோசடிக் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட பிஜேந்தர் குப்தா பரபரப்பு தகவல் அளித்துள்ளார். குப்தா, கடந்த காலங்களில் பல தேர்வு வினாத்தாள் காகித கசிவு வழக்குகளில் சிக்கி, இரண்டு முறை கைதுசெய்யப்பட்டிருப்பதோடு, நீதிமன்றம் மூலம் பிணை பெற்று விடுதலையாகி, பின்னர் மீண்டும் வினாத்தாள் கசிவிற்கு காரணமாகியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவில் தொடர்புடைய சஞ்சீவ் முகியாவை பிடிக்க முடியாது எனவும் குப்தா தெரிவித்துள்ளார். இச்சூழலில் சஞ்சீவ் முகியாவுக்கு கிட்டத்தட்ட ரூ.30 கோடி கடன் இருப்பதாகவும், அதனால் அந்த கடனை அடைத்து, ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என விரும்பிய அவர் இது போன்ற மோசடி வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பி.பி.எஸ்.சி) ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வுத் தாள் கசிவு உள்ளிட்ட விவகாரத்தில் முக்கிய புள்ளியாக இருந்தவர் சஞ்சீவ் முகியா என்றும், தொடக்க காலத்தில் அரசு தேர்வை காதில் புளூடூத் செட் அணிந்து தேர்வு எழுதி மாட்டிக்கொண்டதாகவும், தற்போது நீட் தேர்வு ஊழலில் அவரது மகன் ஷிவ் ஈடுபட்டுள்ளதாகவும் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தேர்வு வினாத்தாள்களை கசியவிடும் மிகப்பெரிய மாஃபியா கும்பலுக்கே முதன்மையாக இருப்பவர் பேடி ராம் என்றும், ஜான்பூரில் அவருக்கு உதவியாளராக இருந்தபோது மாணவர் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதற்காக தாங்கள் வினாத்தாள் கொடுத்து அவருக்கு உதவியதாகவும், அதன் விளைவாக சிறைக்குச் சென்றதாகவும் குப்தா கூறியுள்ளார். தற்போது பேடி ராம் உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

நீட் வினாத்தாள் கசிந்துவிடும் என மார்ச் மாதமே காட்சிப் பதிவை வெளியிட்டு, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்தார், மேலும் அந்த வீடியோ வைரலானது. 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா அரசு பணியாளர் தேர்வாணையம் (OSSC) தேர்வுத் தாள் கசிவு வழக்கு, பீகார் பப்ளிக் சர்வீஸ் ஆணையம் மற்றும் மத்தியப் பிரதேச பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வினாத்தாள் கசிவு ஆகியவற்றில் குப்தா ஈடுபட்டுள்ளார். வினாத்தாள் கசிவு மற்றும் வினாத்தாள் திருட்டு மற்றும் விற்பனையில் 24 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதோடு, குப்தா இதில் முக்கிய பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள மாஃபியா பேடி ராம் என்பவரின் உதவியாளராக இருந்த பிஜேந்தர் குப்தா, அவருடைய உதவியுடன் இதனைச் செய்தது தெரியவந்துள்ளது.

பிஜேந்தர் குப்தா
இதனிடையே இந்தியாவில் அரசு தேர்வுகள் மாஃபியா கும்பலின் தயவில் நடப்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ் கோகோய் குற்றசம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை ஆதரிப்பவர்கள், வினாத்தாள் மோசடி கும்பலை ஊக்குவிக்கிறார்கள். வினாத்தாள் மோசடி கும்பல், நாட்டின் எதிர்காலமான இளைஞர்களின் வாழ்க்கையை சிதைக்கின்றன. கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க-வின் ஊடுருவல் காரணமாக தகுதிவாய்ந்த இந்தியர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: ‘விகடன் இணையம்’, 27.6.2024

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *