கொல்கத்தா, ஜூன் 28- அமெரிக்கா வில் இருந்து கொல்கத்தா வந்தநோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு வங்காள மொழி தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை கொண்டுள்ளது. இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவது சரி என்று நான் கருத வில்லை. இந்தியா, ‘இந்து தேசம் அல்ல’ என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அயோத்தி அமைந்துள்ள பைசா பாத்தில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. ஏராளமான பணம் செலவழித்து ராமர் கோவில் கட்டி, இந்தியாவை இந்து தேசம் என்று காட்டுவது, காந்தியாரின் தேசத்தில் நடந்திருக்கக்கூடாது. இது, இந்தியாவின் உண்மையான அடையாளத்தை புறக்கணிக்கும் முயற்சி. ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் மாற்றம் இருக்கும் என்று நம்புகிறோம்.
ஆனால், தேர்தலுக்கு முன்பு போலவே, விசாரணையின்றி சிறை யில் அடைத்தல், ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு போன்றவை இப்போதும் தொடர்கின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும்.
நான் குழந்தையாக இருந்தபோது, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் விசாரணையின்றி பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். நான் இளைஞராக இருந்தபோது, என் உறவினர்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்கப் பட்டனர். காங்கிரஸ் கட்சியையும் இதற்கு குறை சொல்ல வேண்டும். ஆனால், அப்போது நடந்ததை விட பா.ஜனதா ஆட்சியில் அதிகமாக நடக்கிறது. புதிய ஒன்றிய அமைச்சரவை, பழைய அமைச்சரவையின் நக லாக இருக்கிறது.
அமைச்சர்கள் பலர் அதே துறையை கவனிக்கின்றனர். லேசான மாற்றம் இருந்தாலும், அரசியல்ரீதியாக வலிமையானவர்கள் இன்னும் வலிமையாகவே உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.