புதுடில்லி, ஜூன் 28- மக்கள வையில், நெருக்கடி நிலை பற்றி மக்களவைத் தலைவர் பேசியதை தவிர்த்து இருக்கலாம் என்று அவரைச் சந்தித்து ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தார்.
மக்களவைத் தலைவருடன் சந்திப்பு
நாடாளுமன்ற மக்களவை தலைவராக ஓம் பிர்லா 26.6.2024 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதன் 49ஆவது ஆண்டு நிறைவையொட்டி. ஒரு தீர்மானம் வாசித்தார். அதில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பற்றிய கடும் விமர்சனங்கள் இருந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கிடையே அவர் தீர்மானத்தை வாசித்தார். இந்நிலையில், நேற்று (27.6.2024) ஓம்பிர்லாவை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சந்தித்தார்.அவருடன், தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாடி) கனிமொழி (தி.மு.க.), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் -சரத்பவார்). கல்யாண் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களும் உடன் சென்றனர்.
அதிருப்தி
அந்த சந்திப்பின்போது, மக்களவையில் நெருக்கடி நிலை பற்றி மக்களவைத் தலைவர் பேசியதற்கு அவரிடம் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தார்.
இத்தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக மக்களவைத் தலைவர் அறிவித்தார். அதன்பிறகு ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களுடன் சேர்ந்து மக்களவைத் தலைவரை ராகுல்காந்தி சந்தித்தார். அது மரியாதை நிமித்தமான சந்திப்பு.
தவிர்த்து இருக்கலாம்
நாடாளுமன்றசெயல்பாடு பற்றிய பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம். நெருக்கடி நிலை பற்றி மக்களவைத் தலைவர் பேசியதையும் ராகுல் காந்தி எழுப்பினார்.
“நெருக்கடி நிலை பற்றிய பேச்சு, முற்றிலும் அரசியல்ரீதியானது. அதை மக்களவைத் தலைவர் தவிர்த்து இருக்கலாம்” என்று ராகுல்காந்தி மக்களவைத் தலைவரிடம் தெரிவித்தார்.
-இவ்வாறு அவர் கூறினார்.