தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் நுழைந்து முழக்கம்
புதுடில்லி, ஜூன் 28- டில்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்குள் புகுந்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். தேர்வுக்கு முன்பாகவே பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. ஆனால் தேர்வை நடத் தும் தேசிய தேர்வு முகமை அதனை திட்டவட்டமாக மறுத்தது.
இதனிடையே நீட் நுழைவுத் தேர்வின் முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளான ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகின.
இதில் தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
மாணவர் அமைப்பினர் போராட்டம்
இதற்கிடையில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப் பான தேசிய மாணவர் சங்கத்தினர் டில்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த மாணவர் அமைப்பினர் அலுவலகத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அலுவலகத்தைப் பூட்டினர்
இதனிடையே போராட்டக்காரர்கள் வளாகத்துக்குள் நுழைந்ததை தொடர்ந்து. அலுவலகத்துக்குள் இருந்த ஊழியர்கள் அலுவலகத்தை உள்பக்கமாக பூட்டினர்.
அதே சமயம் போராட்டக்காரர்கள் இரும்புச் சங்கிலி மற்றும் பூட்டினால் அலுவலகக் கதவை வெளியில் இருந்து பூட்டினர். தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அலுவலகத் துக்கு பூட்டுப்போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற் பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் நிலைமையை சமாளிக்க போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் தடியடி
இதனிடையே நீட் தேர்வு முறைகேடு மற்றும் ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தேர்வு முகமைக்கு எதிராகவும், ஒன்றிய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங் களை எழுப்பினர். போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து போக செய்ய காவல்துறையினர் முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.