தமிழ்நாடு முதலமைச்சர் அவசர கதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்
அரசியல் ஆதாயம் தேடுவது முறையானதல்ல!
மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி
மதுரை, ஜூன் 28 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட மரணம் வேதனைக்குரியது. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக நடத்தியிருக்கிறது. இதனை அரசியலாக்குவது சரியல்ல. குறை கூறுபவர்கள் ஆட்சியின்போதும் இது நடந்திருப்பதை வசதியாக மறந்துவிடக் கூடாது என்று மதுரையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
நேற்று (27.6.2024) மதுரையில் நடைபெற்ற பெரியார் பெருந்தொண்டர் முனியசாமி அவர்களின் பவள விழாவில் பங்கேற்க மதுரை சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
பேட்டியின் விவரம் வருமாறு:
எங்களுடைய இயக்கத்தின் மாநகர தலை வர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தோழர் முனியசாமி அவர்களுடைய 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி –பவள விழாவையொட்டி அவர் தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு அல்லல்களையும், சோதனைகளையும் சந்தித்து, அவற்றை யெல்லாம் சாதனைகளாக்கி வளர்ந்திருக்கின்றார் என்பதை ‘‘விறகு வண்டிமுதல் விமானம் வரை‘‘ என்ற ஒரு நல்ல தலைப்பில் அவருடைய தன் வரலாற்றை எழுதியிருக்கிறார். அந்நூலை வெளியிடக்கூடிய நிகழ்ச்சிக்காக நான் வந்திருக்கின்றேன். உங்களையெல்லாம் சந்திப்பதி்ல மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
சக தோழர்களாக இருக்கக்கூடிய பத்திரிகை யாளர்களை ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மதுரை மாநகரில் சந்திப்பில் மகிழ்ச்சி!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
பேசுபொருள் ஆகியிருக்கிறதே?
செய்தியாளர்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பெரிய பேசு பொருளாக இருக்கி றது. அ.தி.மு.க. பட்டினிப் போராட்டம் நடத்தியிருக்கிறது. ஒரு நபர் ஆணையம் வைத்து விசாரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. கள்ளச்சாராயத்தைத் தடுத்திருக்கவேண்டும் என்றுதான் அனைவரும் கோரிக்கை வைக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர் பதில்: ஓர் அரசாங்கம் தன்னுடைய கடமையைச் செய்கின்றபொழுது, காவல்துறையின்மூலமாகவும், ரெவின்யூ துறை மூலமாகவும், அதிகாரிகளின் மூலமாகவும்தான் அதனைச் செய்ய முடியும்.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், என்னென்ன செய்ய முடியுமோ அவை அத்த னையையும் செய்திருக்கிறார்கள்.
சில நேரங்களில் தவறு இழைக்கும் அதி காரிகள் காரணமாக, இந்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்பதைக் கண்டறிந்தவுடன், இன்னும் வேறு ஏதாவது சிக்கல்கள் இருக்கின்ற னவா என்பதற்காக ஒரு தனி நீதிபதி விசாரணை ஆணையத்தை நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
எனவே, இந்தச் செய்தி வெளிவந்தவுடன், முதலமைச்சர் அவர்கள் அந்தப் பகுதிகளுக்கு அமைச்சர்களை அனுப்பியிருக்கிறார். உடனடியாக என்னென்ன செய்ய முடியுமோ, 24 மணிநேரத்தில் அவற்றையெல்லாம் முதலமைச்சர் அவர்கள் மின்னல் வேகத்தில் செய்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் இந்தப் பிரச்சினையை – தங்களுக்கு 40–க்கும் 40 இடங்களிலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து தாங்கள் எப்படி மீளுவது என்று தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில், வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் ஒருவருக்கு ஒரு சின்ன கட்டை கிடைத்தால், அதையே தாங்கள் தெப்பமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்பதுபோல, இவர்களும் அளவுக்கு அதிகமாக இந்தப் பிரச்சினையை அரசியல் ஆக்குகிறார்களே தவிர, வேறொன்றுமில்லை.
எந்தப் பணியையும் வருமுன்னர் காக்கவேண்டும் என்பதில் அரசாங்கத்திற்கு உரிய அக்கறை எல்லா துறைகளிலும் உண்டு.
ஆனால், அதையும் தாண்டி, அரசு இயந்தி ரங்களில் சில இடங்களில் கோளாறு நடைபெற்று இருக்கிறது என்பதால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் உள்பட இட மாற்றம் செய்திருக்கிறார்கள்; சிலரை தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்; அந்த இடத்திற்குப் புதிய அதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள். உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதியை அறிவித்திருக்கிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய மருத்துவம் கிடைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முன் மாநிலம் தழுவிய அளவில் அல்ல – இந்திய அளவிற்கு ஏராளமான கள்ளச்சாராய சாவுகள் நடைபெற்று இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்களின் காலத்திலும் நடந்திருக்கின்றன. அப்பொழுது அவர்கள் எல்லாம் காட்டாத வேகத்தை, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் காட்டியிருக்கிறார்.
அமைச்சர்களை விரைவுபடுத்தி இருக்கிறார். சட்டமன்றம் நடைபெறக்கூடிய காலகட்டம் இது. சட்டமன்றத்திலும் இதனைத் தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்காக அறிக்கைகளைக் கொடுத்திருக்கிறார்.
இப்படி எல்லா பணிகளையும் தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் அவர்களும் செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில், தாங்கள் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுவதற்கு ஏதாவது வாய்ப்புக் கிடைக்குமா? என்று காத்திருந்தவர்கள் – இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது அவர்களுக்கு எண்ணெய்ச் செலவாக இருக்குமே தவிர, பிள்ளை பிழைக்காது.
அ.தி.மு.க., கள்ளக்குறிச்சிப் பிரச்சினையை அரசியல் ஆக்குவது ஏன்?
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டு, இன்னொரு தோல்வியை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று பின்வாங்கிய நிலையில், அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், அதிலிருந்து மீளுவதற்கு இது வாய்ப்பாக இருக்கும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், சட்டமன்றத்திற்குள் சென்று தங்களுடைய பணியைச் செய்வதற்குப் பதிலாக, தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்து, இதுபோன்ற வித்தைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இது ஒரு தற்காலிகமாகத்தான் இருக்கும்.
ஏனென்றால், தமிழ்நாட்டில் மட்டும்தான் கள்ளச்சாராய உயிரிழப்பு நடந்திருக்கிறது என்பதல்ல; இந்தியா முழுவதும் நடைபெற்று இருக்கிறது. இதுபோன்று எங்கே நடந்தாலும் அதனை ஏற்க முடியாது. எங்கெங்கே ஓட்டைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து அதனை சரி செய்யவேண்டும்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமித்து, அறிக்கை கொடுங்கள் என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அந்த நீதிபதி அவர்களும், தன்னுடைய விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
என்னென்ன செய்யவேண்டுமோ, அவற்றையெல்லாம் ஓர் அரசாங்கம் தெளிவாகச் செய்துகொண்டிருக்கின்றது.
எதிர்க்கட்சியினரோ, இது ஒரு ‘வரப் பிரசாதம்‘ என்று கருதி, அளவுக்கதிகமான அரசியலை இதில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். முழுக்க முழுக்க இது அரசியல் நாடகமே தவிர, மனிதநேயத்தோடு அணுகும் ஒரு பிரச்சினை அல்ல.
தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
செய்தியாளர்: தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, ஓராண்டோ ஆகவில்லை; மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதுவரையில் கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டதா?
தமிழர் தலைவர் பதில்: உங்களுடைய வார்த்தைப்படியே, கடந்த மூன்றாண்டு களில்தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கிறதா?
ஒரு விபத்து என்பது எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம். இப்பொழுது நடைபெற்று இருக்கி்ன்ற கள்ளச்சாராய உயிரிழிப்புகள் என்பது விபத்து போன்றது.
அதற்கு யார் காரணமானவர்களோ,
அவர்களுக்குப் பரிந்து பேசியோ, அவர்களுடைய செயல்களை நியாயப்படுத்தியோ, அவர்களைக் காப்பாற்றுவதற்கோ தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
எந்த அரசாங்கத்தில், உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவரை வெளியே அனுப்பி யிருக்கிறார்கள்?
கடந்த மூன்றாண்டுகள் தி.மு.க. ஆட்சியில், எந்த பிரச்சினையிலும் முதலமைச்சர் அவர்கள் பின்வாங்கவில்லை. இந்தப் பிரச்சினையில் என்ன செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்திருக்கிறார்.
முதலமைச்சரே, ஒவ்வொரு காவல்துறை அதிகாரியாகவும் இருக்க முடியாது. ஏனென்று சொன்னால், அரசு இயந்திரத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. ரெவின்யூ துறை, காவல்துறை இருக்கிறது. அவரவர்கள் தங்களு டைய கடமையைச் செய்யத் தவறுகின்ற நேரத்தில், அவர்களைக் கண்டிக்கவேண்டியதும், திருத்தவேண்டியதும், மாற்றவேண்டியதும், தற்காலிக நீக்கம் செய்வதும், அரசின் கடமை என்கிற உணர்வோடு, இனி இதுபோன்ற நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் ஒரு முதலமைச்சரோ, ஓர் அரசாங்கமோ செய்ய முடியுமே தவிர, வேறொன்றும் செய்ய முடியாது.
மருத்துவமனைகளில் மருந்துகள் கையிருப்பு இல்லை என்று எதிர்க்கட்சியினர் சொன்னார்கள். அதற்குத் தெளிவான பதிலை அமைச்சர் அவர்கள் சொல்லியிருக்கிறார்.ஆகவேதான், மிகவும் வருந்தத்தக்கது; அதிர்ச்சிக்குரியது, நடக்கக்கூடாதது நடந்து விட்டது என்பதெல்லாம் உண்மைதான் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இனி இதுபோன்று நடக்காமல் இருப்பதற்காகத்தான் தனி நீதிபதி விசாரணை ஆணையம் – கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார் முதலமைச்சர் அவர்கள்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுகின்றதே?
செய்தியாளர்: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவோம் என்று சொல்லியிருக்கிறார்; இதற்குத் தமிழ்நாடு அரசு எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றவில்லையே?
தமிழர் தலைவர் பதில்: ஏற்கெனவே இதற்குப் பதில் சொல்லியிருக்கின்றார் நம்முடைய பொதுப் பணித் துறை அமைச்சர். தடுப்பணையை ஒரு மாநில அரசு கட்ட முடியாது.
ஏனென்றால், இப்பொழுது உள்ள சட்டப்படி, ஒன்றிய அரசின் அனுமதி பெறவேண்டும்; தமிழ்நாடு அரசின் விருப்பத்திற்கு மாறாகவும் செயல்பட முடியாது.
மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததற்காக, இதுபோன்று சொல்கிறார்.
ஆந்திரா மட்டுமல்ல, கேரள மாநிலம், கருநாடக மாநிலத்திலும் இதுபோன்ற பிரச்சி னைகள் இருக்கின்றன.
ஆகவே, இதுபோன்ற பிரச்சினைகள் எந்தெந்த மாநிலங்களில் இருந்தாலும், உறவு கள் வேறு; உரிமைகள் வேறு!
ஆனால், உறவுகள் எப்படி இருந்தாலும், உரிமைகளை விட்டுக் கொடுக்காது தமிழ்நாடு அரசு என்பதை அவ்வப்பொழுது வலி யுறுத்தவேண்டிய நேரத்தில் வலியுறுத்துவதற்கு இந்த அரசு தவறுவதில்லை.
கூட்டணிக் கட்சிக்காரர்களும், மற்றவர்களும் இதில் கட்சி வேறுபாடின்றி, ஒற்றுமையாக இருந்து எதிர்க்கவேண்டிய பிரச்சினை. ஆகவே, இதில் அரசியல் கண்ணோட்டம் தேவையில்லை
ஒன்றிய அரசின் உள்நோக்கமா?
செய்தியாளர்: ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்படும்பொழுது, ஒன்றிய அரசு, தன்னுடைய தேசிய மனித உரிமை ஆணையத்தை அனுப்பும். மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற பொழுதும் அனுப்பினார்கள். இப்பொழுது ஒரு நபர் ஆணைய விசாரணை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்த பிறகும்கூட, ஒன்றிய அரசு தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய மகளிர் ஆணையத்தை அனுப்பி விசாரணை நடத்துகிறார்களே, இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா?
தமிழர் தலைவர் பதில்: நிச்சயமாக. தேசிய மனித உரிமை ஆணையத்தின் அதிகார எல்லை என்னவென்று புரியாமல், தலைப்புச் செய்தியாக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
யாரையும், நோட்டீசு கொடுத்து விசார ணைக்கு அழைப்பதற்குரிய அதிகாரம் அதற்குக் கிடையாது. இதையெல்லாம் அவர்கள் வித்தை காட்டுவதற்காக செய்கிறார்களே தவிர, அவர்களுக்குச் சட்டப்படி யாரையும் தண்டிப்பதற்கு உரிமை கிடையாது.
எந்தச் சட்டத்தில், எந்தப் பிரிவின்கீழ் இப்படி செய்கிறார்கள் என்பதை அவர்கள் சொல்லட்டும்; அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம்.
ஆகவே, இது ஒரு வித்தைதான். அதே போன்று, இப்பிரச்சினையில், சி.பி.அய். விசாரணை வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அ.தி.மு.க. மேனாள் பொதுச்செயலாளரும், மேனாள் முதலமைச்சருமான அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் என்ன சொன்னார் என்பது சட்டமன்றக் குறிப்பில் இருக்கிறது.
‘‘சி.பி.அய். என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா?‘‘ என்று கேட்டார்.
இதை பழனிசாமி அவர்கள் மறந்துவிட்டி ருந்தாலும், மற்றவர்களுக்காவது நினைவில் இருக்கவேண்டும்.
அதுமட்டுமல்ல,எப்பொழுதுசி.பி.அய். விசாரணை செய்யவேண்டும் என்று கோரவேண்டும் என்றால், எதுவும் செய்யாமல், விசாரணை ஆணையம் அமைக்காமல் இருந்தால் கேட்கலாம்.
தமிழ்நாடு அரசுதான், தனி நபர் விசாரணை ஆணையத்தை அறிவித்திருக்கிறதே! உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் அவர்களை முதலமைச்சர் நியமித்திருக்கிறார்.
தனி நபர் விசாரணைமூலம் எதுவும் நடக்காது. ஆகவே, நாங்கள் சி.பி.அய். விசாரணை கேட்கிறோம் என்று ஒரு நொண்டிச் சாக்கு சொல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
எதை நினைத்து இப்படிச் சொல்கிறார் என்றால், இவர் முதலமைச்சராக இருந்த பொழுது, ஜெயலலிதா அவர்களுடைய சாவு இயற்கையானதா? என்று விசாரிப்பதற்காக நீதிபதி ஒருவரை நியமித்தார். ஒரு நீதிபதி யைத்தான் போட்டாரே தவிர, பல நீதிபதிகளை போடவில்லை.
ஒருவேளை அந்த விசாரணை எப்படி நடந்தது என்பது அவருக்குத் தெரியும். அதுபோன்று இது நடைபெறும் என்று அவர் நினைக்கவேண்டாம்.
ஆகவேதான், அவர் போட்ட ஒரு நபர் ஆணையமல்ல இப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்திருக்கும் தனி நபர் விசாரணை ஆணையம் – சுதந்திரமாக இயங்கக்கூடிய ஆணையமாகும்.
அவரவர் வசதிக்கேற்ப, அரசியலுக்கேற்ப, பருவத்திற்கேற்ப, காற்றடிக்கும் திசைக்குத் திரும்பக்கூடிய ஒரு நபர் ஆணையமாக இருக்காது! அந்த வகையில், யார் வழக்குப் போட்டாரோ, அந்த நபரே, அந்த ஆணையத்தில் சாட்சியம் சொல்வதற்குத் தயாராக இல்லை.
அந்த ஒரு நபர் ஆணையம் வேறு; இப்பொழுது நியமித்திருக்கும் ஒரு நபர் ஆணையம் என்பது வேறு.
அதுபோன்று நினைத்துக்கொண்டு, இப்பொழுது பேசினால், அவர்கள்தான் ஏமாற்றம் அடைவார்களே தவிர, வேறொன்றுமில்லை.
முதலமைச்சரின் வருமுன்னர் காக்கும் முடிவுகள்!
அதே நிலை, தன்னுடைய அரசிற்கு ஏற்படக்கூடாது என்பதில் – வருமுன்னர் காக்கக்கூடிய உணர்வோடு இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால்தான், தெளிவான, சரியான வழிமுறை என்னவோ அதனைச் சொல்கிறார்.
எனவே, நாங்கள் சமூகநீதிக்கு விரோதிகள் அல்ல; அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்கு எதிரானவர்கள் அல்ல. குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக்கூடாது என்ப வர்கள் அல்ல – செய்வதை சரியாகச் செய்து, கிடைக்கவேண்டியது, சரியாகக் கிடைக்க வேண்டும் என்பதுதான் அதனுடைய அடையாளம்.
அதன் காரணமாகத்தான், ஜாதிவாரிக் கணக்கெடுப்புதான் ஒரே தீர்வு. அதை வலியுறுத்தவேண்டும். இப்பொழுது எல்லோரும் அந்தக் கருத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதினால், பா.ஜ.க. கூட்டணிக் கட்சியினரிடையேயும் அந்தக் கருத்து இருப்பதினால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தினால், இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் பயன்பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.