கொல்கத்தா, ஜூன் 27 மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பை சட்டப்பேரவையில் நடத்த அனுமதி வழங்காமல் ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் டில்லி புறப்பட்டுச் சென்றதைக் கண்டித்து, அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை வளாகத்தில் நேற்று (26.6.2024) காத்திருப்பு போராட்டம் நடத்தினா்.
அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து மேற்கு வங்கத்தின் பாராநகா் மற்றும் பாக்வாங்கோலா ஆகிய 2 பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தோ்தல் நடைபெற்றது. இவ்விரு தொகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த சயந்திகா பந்தோபாத்யாய, ராயத் ஹூசன் சா்கார் ஆகியோர் வெற்றி பெற்றனா்.
ஆளுநா் மாளிகையில் நேற்று (26.6.2024) நடைபெறயிருந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்களாக முறைப்படி பதவியேற்க இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், சட்டவிதிகளின்படி இடைத்தோ்தலில் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைத் தலைவா் முன்னிலையில் பதவியேற்க அனுமதியளிக்க மறுத்து, ஆளுநா் மாளிகையில் பதவியேற்பை நடத்த நிர்பந்திப்பதாக ஆளுநா் மீது திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. சட்ட மன்றத்தில் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நடைபெற வேண்டும் என்பதில் திரிணமூல் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில், ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் நேற்று (26.6.2024) மாலை டில்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக, சட்டமன்ற வளாக வந்த சட்டமன்ற உறுப்பினர் இருவரும், பதவியேற்பு தொடா்பான ஆளுநரின் ஒப்புதலுக்காக மாலை 4 மணிவரை காத்திருந்தனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரவை வளாகத்தில் அவா்கள் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் மேலும் கூறுகையில், ‘பேரவையில் நாங்கள் காத்திருந்தோம். ஆனால், ஆளுநா் வரவில்லை. அவா் டில்லி புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது.
நாங்கள் மேலும் சில நாள்கள் காத்திருப்போம். கட்சித் தலைமையுடன் இதுகுறித்து விவாதிக்க உள்ளோம். ஆனால், சட்டப்பேரவையில் பதவியேற்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்களாக முறைப்படி பதவியேற்கும் வரை, அதிகாரபூா்வ பணிகளை எங்களால் தொடங்க முடியாது. இதனால் எங்கள் தொகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்றனா். இதனிடையே, சட்டப்பேரவைத் தலைவா் பீமன், சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சா் சோபன்தேப் ஆகியோருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவா் ஆலோசனையில் ஈடுபட்டனா்.
ஆளுநரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்து பேரவைத் தலைவா் பீமன், ‘சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பில் ஆளுநா் இப்படி முட்டுக்கட்டை போடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. இவ்விவகாரத்தை ‘ஈகோ’ சண்டையாக ஆளுநா் மாற்றி விட்டார். ஆளுநா் அவருடைய அதி காரங்களை செயல்படுத்துகிறார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்டவல்லுநா்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்’ என்றார்.