* கருஞ்சட்டை
வைதீகச் சடங்குகளில் அப்படி ஓர் அய்தீகம் உண்டு.
ஆர்.எஸ்.எஸ். வார இதழான (21.6.2024, பக்கம் 35) ‘விஜயபாரதத்தில் ஒரு கேள்வி – பதில்.
கேள்வி: திருமணத்தின்போது அம்மி மிதிக்கும் சடங்கு ஏழு அடிகள் எடுத்து வைப்பது ஏன்?
பதில்: இல்லற வாழ்வில் (1) விருந்தினரை உபசரித்தல் (2) மனம், உடல்நலம் பேணுதல் (3) வீட்டில் விளக்கேற்றி வழிபடுதல் (4) குடும்ப நிம்மதிக்கு வழி வகுத்தல் (5) புத்திசாலித்தனமாக செயல்படுதல் (6) இன்பத்திலும், துன்பத்திலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவுதல், (7) தானம், தர்மம் செய்தல் ஆகிய ஏழு பண்புகளை அது குறிக்கிறது.
பார்ப்பனர்களின் திரிபுகளை நினைத்தால் பரிதாபப்படவேண்டியிருக்கிறது. சாஸ்திரங்களில், புராணங்களில் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கூற முடியாமல், பதுங்குக் குழிகளைத் தேடி ஓடுகிறார்கள். அம்மி மிதிக்கும் சடங்குக்கு – ‘விஜயபாரதம்‘ கொடுக்கும் வியாக்கியானத்துக்கு ஆதாரம் உண்டா?
அம்மி மிதித்தலுக்கு இவர்களின் சாஸ்தி ரங்களில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொன்னால், அதன் ஆபாசம் ஏழு ஊருக்கு நாற்றம் எடுக்கும்.
அம்மி மிதித்தலில் உள்ள புராண தாத்பரியம் வேறாகவே இருக்கிறது.
கவுதம முனிவரின் மனைவியான அகலிகையை – இந்திரன், கவுதமன்போல உருவெடுத்துப் புணர்ந்தான் என்றும், கவுதம முனிவர் அதனைக் கண்டு, இந்திரனுக்கும், மனைவி அகலிகைக்கும் சாபமிட்டான். இந்திரன் உடல் எல்லாம் ……………….. (சொல்லுவதற்கே அசூயையாக உள்ளது) அப்படி அடையாளங்களாக ஆகிவிட்டது என்றும், அகலிகைக் கல்லாக சபிக்கப்பட்டாள் என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
காட்டில் கிடந்த அந்தக் கல், ராமன் காலடி பட்டு சாபம் நீக்கப்பட்டாள் என்கிறது அவாளின் சாஸ்திரம்.
‘விஜயபாரதம்’ கூறும் அந்த அம்மி (கல்) என்பது கவுதம முனிவரால் சபிக்கப்பட்ட அகலிகை. கற்பு தவறினால் கல்லாகி விடுவாய் என்பதற்கான எச்சரிக்கைதான், கல்யாணத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த அம்மிக்கல்!
இதைச் சொல்வதற்கு வெட்கப்பட்டுதான் ‘விஜயபாரதம்’ என்ற ஆர்.எஸ்.எஸ். இதழ் புதிய விளக்கங்களைச் சொல்லித் தப்பித்து ஓடுகிறது.
சாஸ்திரோத்தங்களை உள்ளது உள்ளபடியே சொல்ல முடியாத நிலையில், புதுப்புது விளக்கங்களைச் சொல்லித் தப்பிப்பதை – முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவ்வாறு பேசினார்.
Our religion has degenerated into rituals, our society which was once classless and casteless has degenerated into water tight compartments of caste and creed and all the while, we have kept either silent or have been supplying defense to superstition and orthodoxy by offering liberal interpretations is a scholarly way.
‘‘நம் மதம் வெறும் சடங்குகளாகவே தரம் தாழ்ந்த அவல நிலையில் உள்ளது. ஜாதி பேதங்களும், வகுப்புப் பிரிவுகளும் இல்லாமல் இருந்தது – நம் சமூகம் முன்பொரு காலத்தில். அது இன்று மறுக்க முடியாத அளவுக்கு ஜாதி மற்றும் இனப் பாகுபாடுகள் நிறைந்த சமூகமாக இழிவடைந்துள்ளது. இந்த மாற்றத்தை நாம் மவுனமாக வேடிக்கை பார்த்தபடியே இருந்துவிட்டோம் என்றால், அது மிகையாகாது. மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாக இருந்துவிட்டோமோ என்றும் தோன்றுகிறது. மேதாவித்தனமான பல விளக்கங்களை அளித்தே பழைமைவாதத்திற்குத் துணை போய்விட்டோம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது’’ என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டம் அளிப்பு விழாவி்ல் பேசினார் முதலமைச்சர் அண்ணா (18.11.1967).
அண்ணா சொன்னதைத்தான் இன்று ‘விஜயபாரதம்’ செய்கிறது.
அருந்ததியைப் பார் என்கிறார்களே, அது என்ன?
அருந்ததி பத்தினி தேவியாம். வானத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கிறாராம் – அதனை மணப்பெண் பார்க்கவேண்டும் என்கிறார் புரோகிதர். கோடானு கோடி நட்சத்திரங்களில் அருந்ததிதான் பத்தினித் தெய்வம் என்றால், மற்ற கடவுள்களின் மனைவிமார்கள் பத்தினிகள் இல்லையா?
மண்டபத்துக்குள் கல்யாணத்தை நடத்திக் கொண்டு, வானத்து நட்சத்திரத்தை எப்படிப் பார்க்க முடியும்? கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா?
‘‘விவாஹ மந்த்ரார்த்த போதினி’’ என்ற ஒரு நூல் (கல்யாண வீட்டில் சொல்லப்படும் மந்திரங்கள் – தமிழில் மொழி பெயர்த்தவர் கீழாத்தூர் ஸ்ரீனிவாஸாச்சாரியார்; P.O.L. சிரோமணி மற்றும் ஹிந்தி விசாரத்
பதிப்பகத்தார் லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி) லிட்
ஆக பார்ப்பனர் ஒருவரால், பார்ப்பனப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூலின் 27 ஆம் பக்கம் என்ன கூறுகிறது?
‘‘ஸோம: ப்ரதமோ
விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா:’’
இதன் தமிழாக்கம்:
மணப் பெண்ணைப் பார்த்துக் கூறுவது:
‘‘ஸோமன் முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்னி; நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.’’
புரோகிதப் பார்ப்பனரை அழைத்து தட்சணை களை வாரி வழங்கி, கல்யாணத்தை நடத்தச் சொன்னால், ‘‘மணமகளாகிய இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே மூன்று பேர் கணவன்களாக இருந்தனர். நான்காவது கணவன்தான் இந்த மாப்பிள்ளை’’ என்று பொருள்படும் மந்திரத்தைச் சொல்லுகிறான் என்றால், நம் மக்கள் எவ்வளவு ஏமாளிகளாய், அவமானப்படுத்தப்படுபவர்களாய் பக்திப் படுகுழியில் குப்புற விழுந்து கிடக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இதையே தமிழில் மந்திரமாகச் சொல்லி யிருந்தால், பக்திப் பழமாக இருக்கும் பாட்டிகூட கையில் எதை எடுத்துக் கொள்ளும் என்பதைச் சி்ந்திக்கவேண்டும்.
திருமண மந்திரங்களுக்குப் பாஷ்யம் சொல்லும் ஆர்.எஸ்.எஸின் வார இதழான ‘விஜயபாரதம்’ இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் ஏற்படுத்திய எழுச்சியால், பெட்டிப் பாம்பாக இருக்கிறது ஆரியம் என்பதைப் புரிந்துகொள்வீர்!