அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, நவ.19 தமிழ்நாடு முழுவதும் நேற்று (18.11.2023) 1000 சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இதையொட்டி மயிலாப்பூர் தொகுதி நொச்சிகுப்பத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை டெங்குவால் 6777 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர். 564 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர் காய்ச்சல் (இன்புளூயன்சா) பாதிப்பு இருந்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மற்றும் பரிசோதனை செய்ய இந்த மருத்துவ முகாம் பயன்படுகிறது.
சென்னையில் 35 மருத்துவமனைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் 120 மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவுபெற்று உள்ளன. இதற்கு மருத்துவ பணியாளர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. நியமன பணி நிறைவடைந்தவுடன் முதலமைச்சர் அவர்கள் கிட்டத்தட்ட 150 மருத்துவ மனைகளை தொடங்கி வைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள் ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண் டனர்.