அறிவாளிகளாம்!
கேள்வி: ‘பின்தங்கிய தலித் சமூகம் முன்னேற இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகள் மட்டுமே தேவை‘ என்றார் அம்பேத்கர். ஆனால், இட ஒதுக்கீடு எழுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறதே?
பதில்: ஓட்டு வங்கியும், இட ஒதுக்கீடும் இணைந்த பிறகு, ஓட்டு வங்கி தொடரும் வரை இட ஒதுக்கீடு தொடரும்.
‘துக்ளக்’, 4.6.2025
பதிலடி:
‘துக்ளக்’கும், குருமூர்த்தி கும்பலும் எவ்வளவு அறிவாளிகள் என்பதை இதன்மூலம் இருட்டில் உழலும் மூடர்கள் கூட துல்லியமாக அறிந்து கொள்வார்கள்.
சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் தேவை என்பது சட்டப்படியாக சரியானதுதான்.
இப்பொழுது ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை இது தேவை – அவசியம் கருதி நாடாளுமன்றம் நீட்டிக்கச் செய்து வருகிறது என்பது உண்மைதான்.
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வெறும் பத்தாண்டுகளுக்கு மட்டும்தான் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்தப் பக்கத்தில், எந்த மூலையில் கூறப்பட்டு இருக்கிறது? (இதில் தேவையில்லாமல் அண்ணல் அம்பேத்கரை இழுப்பது விஷமத்தனமாகும்).
தாங்கள்தான் அறிவாளிகள், தகுதிக்கு, திறமைக்குப் பெயர் போனவர்கள் என்று பூணூலை உருவிக் கொண்டு ஊளையிடும் இவர்கள் எடுத்துக்காட்டுடன் கூறுவார்களா?
ஏதோ ‘துக்ளக்’கும், குருமூர்த்திகளும் மட்டும் தான் இப்படி உளறுகிறார்கள் என்று எண்ணவேண்டாம்.
பெரும்பாலும் இதேபோல பார்ப்பனர்கள் இப்படியே சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். நாமும் அந்தந்த நேரங்களில் சம்மட்டி அடிகளை கொடுத்துக் கொண்டுதான் வருகிறோம்.
நிஜமாகத் தூங்குபவர்களை ஒரு சொடுக்கில் எழுப்பிவிடலாம். எதையாவது சொல்லி இட ஒதுக்கீட்டின் வேரை வீழ்த்திட வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் இழுத்துப் போர்த்திக் கொண்டு, குறட்டை விட்டு தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியுமா?
இந்த இரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தப் பார்ப்பனர்கள்.
‘துக்ளக்’ படிப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்று அடிக்கடி தனக்குத்தானே பூணூல் முதுகைத் தட்டிக் கொள்ளும் இந்த முப்புரிகள் புதரில் பதுங்கிக் கடிக்கும் ஆபத்தான ஜந்துக்கள் என்பதை மறக்கவேண்டாம்!
– மயிலாடன்
