நெல் கொள்முதல் தொடக்கம் – சாதாரண நெல் குவிண்டாலுக்கு
ரூ.105 – சன்ன ரகத்திற்கு ரூ.130 கூடுதல் ஊக்கத்தொகை
விவசாயிகளுக்கு வழங்க முதலமைச்சர் உத்தரவு
சென்னை, ஜூன் 27 தமிழ்நாட்டில் இந்தாண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்துக்கு சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.105-ஆம் சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.130-ஆம் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரீப் 2024-2025 நிதி ஆண்டில் நெல் கொள்முதல்பருவத்துக்கு ஆதார விலையுடன் ஊக்கத் தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து, நேற்று (26.6.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா,உணவுத் துறை செயலர் கே.கோபால், வேளாண் துறை செயலர் அபூர்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், கடந்த 2023-2024 நிதி ஆண்டில் காரீப் கொள்முதல் பருவத்தில், ஜூன் 25-ஆம் தேதி வரை 3,175 நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,72,310 விவசாயிகளிடமிருந்து 29,91,954 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.6,442.80 கோடி விற்பனைத் தொகையாக வழங்கப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் அதே அடிப்படையில், இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து ஒன்றிய அரசின்பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட இயலாத சூழ்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்த உத்தரவிட்டார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் விவசாயிகளின் நலன் கருதி காரீப் 2024-2025 நிதி ஆண்டில் பருவத்துக்கான நெல் கொள்முதலானது செப்.1-ஆம் தேதி முதல் மேற்கொள்ள ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டது. அதற்கிணங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒன்றிய அரசு அண்மையில் காரீப் 2024-2025-ஆம் பருவத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300 என்றும், சன்னரகநெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,320 என்றும் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நெல்உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-2025 நிதி ஆண்டில் காரீப் கொள்முதல் பருவத்துக்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105-ம்,சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கவும், அதன்படி விவசாயிகளிடம் இருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405 மற்றும் சன்ன ரகம் ரூ.2,450-க்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை வரும் செப்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்து வரும் 2025-2026-ஆம் நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.