புதுடில்லி, ஜூன் 26– நீட் தேர்வு வேண்டவே வேண்டாம் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில், அண்மையில் அந்தத் தேர்வில் நடந்த முறைகேடுகள் மாணவர்களின் எதிர்காலத்தையே நாசமாக்கியது.
1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, வினாத்தாள் கசிவு என பிரச்னை பூதாகரமாக வெடித்ததால் சிபிஅய் விசார ணைக்கு உத்தரவிட்டது ஒன்றிய அரசு. இது ஒருபுறம் இருக்க, காவல்துறை விசாரணையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங் களில் நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந் திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டவர் பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் முகியா என்கிறது காவல்துறை.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் இந்த சஞ்சீவ். பெயருக்கு, கல்லூரி ஒன்றில் தொழில்நுட்ப உத வியாளராக தன்னைக் காட்டிக் கொண்ட சஞ்சீவ் முகியா, முழுக்க முழுக்க வினாத்தாள் முறைகேட்டையே தனது தொழிலாக செய்து வந்திருக்கிறார்.
2016ஆம் ஆண்டு பீகார் அரசுப் பணியாளர் தேர் வாணையம் நடத்திய தேர்வில், வினாத்தாளை கசியவிட்டு, காவல்துறையிடமும் அவர் சிக்கியிருக்கிறார். சஞ்சீவ் முகியாவின் மகனான சிவக் குமார் ஒரு மருத்துவர். ஆனால் தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணமும், பீகாரில் நடந்த ஆசிரியர் தேர்வு வினாத்தாளை கசியவிட்டதுதான் என்று கூறுகிறது காவல்துறை தரப்பு. இப்படி தந்தை, மகன் என இருவருமே வினாத்தாளை கசியவிட்டு கல்லா கட்டுவதில் குறியாக இருக்க, அவர்களுக்கு பக்கபலமாக சஞ்சீவ்வின் மனைவி மம்தா தேவி இருப்பதாக அம்மாநில எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
மம்தா தேவி, ஒரு அரசியல் வாதி. 2020ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவை தேர்தலில்லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி யடைந்தவர். அவர், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்த ஒளிப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, சஞ்சீவ் முகியாவை பாதுகாப்பது யார் என்றும், அவரது மனைவி தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டது குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, நீட் தேர்வு முறைகேட்டில் சஞ்சீவ் முகியா பின்னணியில் ஒரு குழுவே செயல்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதலில் சஞ்சீவ்விடம்தான், பேராசிரியர் ஒருவர் மூலம் செல்பேசியில் நீட் வினா மற்றும் விடைத்தாளை அனுப்பியதாகவும், அங்கிருந்து இந்த முறைகேடு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. தேர்வு நடைபெற்ற மே 5ஆம் தேதிக்கு முந்தைய நாளில், வினாத்தாளை 25 விண்ணப்பதாரர்களுக்கு வழங்கியிருக்கும் இந்தக் குழு, இதற்காக நபர் ஒருவரிடம் 40 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.
குற்றவாளி சஞ்சய் முக்யாவின் மகன் சிவக்குமார் 2016 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி டில்லியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து இப்போது மருத்துவராக உள்ளார், இவரது மனைவியின் சகோதரனும் நீட் தேர்வு எழுதி மருத்துவக்கல்லூரியில் படித்து மருத்துவராக உள்ளார். இவர்களிடம் மருத்துவம் பார்க்கும் நோயாளிகளில் நிலை கேள்விக்குறியாக இருக்கும் இது போல் எத்தனை ஆயிரம் மோசடிமருத்துவர்களை இவர்கள் உருவாக்கி உள்ளார்கள் என்ற கேள்வி எழுகிறது.